மனநிலை பாதித்த பெண்ணுக்கு சரமாரி அடி-உதை; 4 பேர் கைது


மனநிலை பாதித்த பெண்ணுக்கு சரமாரி அடி-உதை; 4 பேர் கைது
x
தினத்தந்தி 10 May 2018 3:45 AM IST (Updated: 9 May 2018 11:41 PM IST)
t-max-icont-min-icon

குழந்தைகளை கடத்த வந்ததாக கூறி சாலையில் திரிந்த மனநலம் பாதித்த பெண்ணை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சோளிங்கர்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள், மனநோயால் பாதிக்கப்பட்டு சாலையில் திரிபவர்கள் குழந்தைகளை கடத்த வந்திருப்பதாக கூறி அவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சில இடங்களில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் கொலையும் செய்யப்பட்டுள்ளனர். குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களில் பலர் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் அப்பாவிகளும் இதில் தாக்கப்படுகின்றனர்.

வடமாநிலத்தவர்கள் தங்கள் குடும்பத்தில் யாராவது மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் இங்கு கொண்டு வந்து அனாதையாக விட்டுச்சென்று விடுகின்றனர். அவர்கள் சாலையில் திரிந்து கொண்டிருக்கின்றனர்.

சோளிங்கரிலிருந்து திருத்தணி செல்லும் சாலையில் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு பெண் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். அவரிடம் அங்கு வந்தவர்கள் எதற்காக இங்கு வந்துள்ளாய், உனக்கு எந்த ஊர் என கேட்டுள்ளனர். ஆனால் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததால் அந்த பெண்ணால் பதில் கூற முடியவில்லை.

இதனால் அந்த பெண், குழந்தையை கடத்த வந்திருக்கலாம் என கூறி அடித்து உதைத்தனர். அடி தாங்க முடியாமல் அந்த பெண் அலறினார்.

இது குறித்து சோளிங்கர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் யுவராஜ், சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சோளிங்கரை சேர்ந்த விஜய் (வயது 25), முத்து (23), பாபு (26), கணேஷ் (27) ஆகியோரை கைது செய்தனர்.

Next Story