விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்: நிர்மலாதேவிக்கு 23-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு


விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்: நிர்மலாதேவிக்கு 23-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு
x
தினத்தந்தி 10 May 2018 5:30 AM IST (Updated: 10 May 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த பேராசிரியை நிர்மலாதேவி நேற்று விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது காவல் வருகிற 23-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை செல்போனில் பேசி தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டதன் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தபின் சாத்தூர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

மாஜிஸ்திரேட்டு கீதா, நிர்மலாதேவியை நேற்று (மே 9) வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதன்பேரில் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

நிர்மலாதேவியின் காவல் முடிவடைந்ததையொட்டி, நேற்று மதுரை மத்திய சிறையில் இருந்து போலீசாரால் வேனில் கொண்டுவரப்பட்டு விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்கமான கோர்ட்டு நடைமுறைக்கு பின்னர் மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி, நிர்மலாதேவியை வருகிற 23-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

அதன் பேரில் போலீசார் அவரை மீண்டும் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.

நிர்மலாதேவியின் சார்பில் ஜாமீன்மனு தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று அப்படி ஏதும் மனு தாக்கல் செய்யப்படவில்லை. 

Next Story