மீண்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு சிறுவனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


மீண்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு சிறுவனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 10 May 2018 3:15 AM IST (Updated: 10 May 2018 1:46 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கீழக்கரையில் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான சிறுவனுக்கு ராமநாதபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கீழக்கரை,

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி ஏராளமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து நோய் தடுப்பு மற்றும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக எடுத்ததாலும், கொசு உற்பத்தியாவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டதாலும் கொசுக்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டது.

தற்போது மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவும் நிலை உருவாகி உள்ளது. கடலோர மாவட்டங்களில் பரவலாக டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு படிப்படியாக மற்ற பகுதிகளுக்கும் டெங்கு கொசுக்கள் மூலம் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அல்அப்சர்(வயது 14) என்ற சிறுவனுக்கு கடந்த சில தினங்களுக்குமுன் திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

மருத்துவ சிகிச்சை எடுத்தும் காய்ச்சல் சரியாகாத நிலையில் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுஉள்ளான். அங்கு சிறுவனை பரிசோதித்த போது டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுஉள்ளது. இதனை தொடர்ந்து உடனடியாக சிறுவனுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதுதவிர தேவிபட்டினம் பகுதியிலும் ஏராளமானோருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மருத்துவ துணை இயக்குனர் டாக்டர் குமரகுருபரனிடம் கேட்டபோது, சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது சிறுவன் நல்ல நிலையில் உள்ளான்.

காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு நோய் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுஉள்ளது. மாவட்டம் முழுவதும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதார பணிகள் முடுக்கவிடப்பட்டுஉள்ளன. காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உரிய பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story