கடும் வறட்சியால் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க 101 இடங்களில் உப்புநீரை குடிநீராக்கும் நிலையங்கள், கலெக்டர் நடராஜன் தகவல்


கடும் வறட்சியால் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க 101 இடங்களில் உப்புநீரை குடிநீராக்கும் நிலையங்கள், கலெக்டர் நடராஜன் தகவல்
x
தினத்தந்தி 10 May 2018 3:30 AM IST (Updated: 10 May 2018 1:46 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடைகால கடும் வறட்சியை சமாளிக்கும் வகையில் 101 இடங்களில் உப்புநீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன என்று மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை இல்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டு நிலத்தடி நீர் ஆதாரங்கள் எல்லாம் வறண்டு போய்விட்டன. காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் இதுநாள் வரை கைகொடுத்து வந்த நிலையில் தற்போது அந்த நீரின் அளவும் படிப்படியாக குறைந்து பாதி நிலைக்கு வந்துவிட்டது. வரும் கோடைகாலத்தில் ஏற்படும் வறட்சியை சமாளிக்கும் வகையில் இந்த காவிரி நீராவது தொடர்ந்து வருமா என்ற சந்தேகம் ஏற்பட்டுஉள்ளது.

இதன்காரணமாக மாவட்ட நிர்வாகம் வறட்சியால் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் நிலத்தடி நீர் ஆதாரம் இல்லாத உப்புநீராக உள்ள பகுதிகளில் மாற்று ஏற்பாடாக உப்புநீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்க முடிவு செய்துள்ளது. அரசின் நிதி உதவியுடன் உப்புநீரை குடிநீராக்கும் 50 நிலையங்களும், மாவட்ட நிர்வாகத்தின் நிதியின் கீழ் 30 நிலையங்களும், இந்திய எண்ணெய் எரிவாயு கழகத்தின் சார்பில் 15 நிலையங்களும், டாடா நிறுவனத்தின் சார்பில் 4 நிலையங்களும், தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் 2 நிலையங்களும் என மாவட்டத்தில் 101 இடங்களில் உப்புநீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த நிலையங்கள் ஒவ்வொன்றும் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட உள்ளன.

இதுதவிர மாவட்டம் முழுவதும் கோடைகால வறட்சியை சமாளிக்கும் வகையில் குடிநீர் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதன்படி ரூ.11 கோடியே 76 லட்சம் மதிப்பில் 395 பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

121 புதிய கிணறுகள் உள்பட இதுவரை 150-க்கும் மேற்பட்ட பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. மீதம் உள்ள பணிகளை இந்த மாத இறுதிக்குள் முடித்து கோடை வறட்சியை சமாளிக்க முழு அளவில் தயாராக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் சுகாதார வளாகங்கள் அனைத்திலும் முழு பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் பழுதடைந்த வளாகங்களை மராமத்து செய்து குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் குடிநீர், கழிப்பறை, மின்வசதி செய்து கோடை விடுமுறைக்குள் பூர்த்தி செய்ய உத்தரவிடப்பட்டுஉள்ளது. இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்தார். அப்போது ஊராட்சிகள் உதவி இயக்குனர் செல்லத்துரை உடன் இருந்தார்.

Next Story