கனமழையால் வறண்ட சூழல் மாறி பசுமைக்கு திரும்பும் வால்பாறை
கனமழையால் வால்பாறையில் வறண்ட சூழல் மாறி பசுமைக்கு திரும்புகிறது. சோலையார் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
வால்பாறை,
வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் அவ்வப்போது ஒரு சில சமயங்களில் லேசான மழையும் பல சமயங்களில் பலத்த இடியுடன் கூடிய கன மழையும் பெய்துவருகிறது. இதனால் சோலையார்அணை, சின்னக்கல்லார்அணை, நீரார்அணை ஆகிய அணைகளுக்கு ஓரளவிற்கு தண்ணீர்வரத்து கிடைத்து வருகிறது. வால்பாறை பகுதியில் கடந்த மார்ச் மாதம் 2-வது வாரத்திலிருந்து கடுமையான வெப்பம் நிலவி வருவதால் வறட்சியின் காரணமாக வனப்பகுதிகள், எஸ்டேட் வனப்பகுதிகள் எல்லாம் காய்ந்த நிலைக்கு தள்ளப்பட்டன.
இதனால் எஸ்டேட் வனப்பகுதிகளில் ஒருசில இடங்களில் காட்டுத்தீயும் பிடித்தது. இந்த நிலையில் கடுமையான வெப்பத்திற்கு மத்தியிலும் வால்பாறை வட்டார பகுதி முழுவதும் அவ்வப்போது பலத்த இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் பசுமைக்கு திரும்பும் நிலை உள்ளது.
நேற்று மாலையும் 3.30 மணியிலிருந்து 6மணிவரை பலத்த இடியுடன் கனமழை பெய்தது. தற்போது பெய்து வரும் மழை காரணமாக சோலையார்அணைக்கு தண்ணீர் வரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் சின்னக்கல்லார், நீரார்அணைகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்படத் தொடங்கியுள்ளது.இதனால் நீரார் அணையிலிருந்து 21 கனஅடித்தண்ணீரும், சின்னக்கல்லார் அணையிலிருந்து 45 கனஅடித்தண்ணீரும் சோலையார்அணைக்கு சுரங்கக்கால்வாய்கள் வழியாக திறந்துவிடப்பட்டு வருகிறது. இதனால்160 அடி கொள்ளளவு கொண்ட சோலையார்அணையின் நீர்மட்டம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அடி உயர்ந்து 10.57 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 128 கன அடித் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் வால்பாறையில் 10 மி மீ மழையும்,சோலையார்அணையில் 8 மி.மீ மழையும், நீராரில் 31 மி.மீ மழையும் பெய்துள்ளது.
கோடைமழைக்கு முன்பாக மழை பெய்வதால், இந்த ஆண்டு வால்பாறை பகுதி முழுவதும் தொடர்ந்து கனமழை கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது வால்பாறை பகுதி முழுவதும் ஒரு வித்தியாசமான காலசூழ்நிலை நிலவி வருகிறது. அதிகாலை நேரத்தில் நல்ல பனி மூட்டமும், பகல் நேரத்தில் மதியம் 2 மணிவரை நல்ல வெப்பமும், மதியத்திற்கு பிறகும் இரவு நேரங்களிலும் பலத்த இடியுடன் கூடிய கனமழையும் பெய்துவரு கிறது. இந்த கால சூழ்நிலை காரணமாக பச்சைத் தேயிலை உற்பத்தியும் அதிகரித்துள்ளது. மே சீசனில் வால்பாறைக்கு வரும் சுற்றுலாபயணிகளும் கோடை வெப்பத்தை தாங்க முடியாத நிலைஏற்படும். ஆனால் இந்த ஆண்டு பெய்துவரும் மழைகாரணமாக சுற்றுலாபயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story