முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை கோவில்பட்டி வருகை ரூ.81¾ கோடி மதிப்பீட்டில் 2-வது குடிநீர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை(வெள்ளிக்கிழமை) கோவில்பட்டி வருகிறார்.
தூத்துக்குடி,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை(வெள்ளிக்கிழமை) கோவில்பட்டி வருகிறார். அங்கு நடைபெறும் அரசு விழாவில் கோவில்பட்டி நகரசபையில் ரூ.81¾ கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ள 2-வது குடிநீர் திட்டத்தை அவர் தொடங்கி வைக்கிறார்.
குடிநீர் குழாய் திட்டம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆயிர வைசியர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கோவில்பட்டி நகரசபை 2-வது குடிநீர் குழாய் திட்டம் தொடக்கம், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை(வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்குகிறார். விழாவில், சிறப்பு அழைப்பாளராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, கோவில்பட்டி நகரசபையில் ரூ.81 கோடியே 82 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு உள்ள 2-வது குடிநீர் குழாய் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
மாநகராட்சி திட்டங்கள்
ரூ.127 கோடி பள்ளிக்கல்வித்துறையின் மூலம் ரூ.39 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள 4 கட்டிடங்கள், தூத்துக்குடி மாநகராட்சியில் 12 இடங்களில் ரூ.6 கோடியே 35 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ள பூங்காக்கள், ஊரக வளர்ச்சி துறையின் மூலம் மாவட்டம் முழுவதும் ரூ.36 கோடியே 88 லட்சம் செலவில் 109 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களையும், கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் ரூ.23 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ள கால்நடை கிளை மருந்தகம், பொதுப்பணித்துறையின் மூலம் ரூ.36 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள 2 கட்டிடங்கள், வேளாண்மைத்துறையின் மூலம் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான கட்டிடம் ஆக மொத்தம் ரூ.127 கோடியே 24 லட்சம் மதிப்பிலான நிறைவு பெற்ற பணிகளை திறந்து வைக்கிறார்.
மேலும், கோவில்பட்டி நகரசபை மூலம் 2 இடங்களில் ரூ.64 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய கட்டிடங்களுக்கும், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, பள்ளி கல்வித்துறை மூலம் 9 இடங்களில் ரூ.13 கோடியே 91 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட உள்ள கட்டிடங்களுக்கும், ஊரக வளர்ச்சித்துறை மூலம் 133 இடங்களில் ரூ.33 கோடியே 23 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட உள்ள கட்டிடங்கள் ஆக மொத்தம் ரூ.47 கோடியே 79 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள 144 கட்டிட பணிகளுக்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்.
நலத்திட்ட உதவிகள்
விழாவில் பல்வேறு துறைகள் சார்பில் 5 ஆயிரத்து 636 பயனாளிகளுக்கு ரூ.16 கோடியே 94 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்-அமைச்சர் வழங்குகிறார்.
விழாவில் பல்வேறு துறை அமைச்சர்கள், நகரசபை நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேலாண்மை இயக்குனர் மகேசுவரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வரவேற்று பேசுகிறார். தலைமை என்ஜினீயர் முருகதாஸ் நன்றி கூறுகிறார்.
Related Tags :
Next Story