ரன்னிமேடு, ஹில்குரோவ் ரெயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படும், சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் தகவல்
ரன்னிமேடு, ஹில்குரோவ் ரெயில் நிலையங்கள் விரைவில் புதுப்பிக்கப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் சுப்பராவ் தெரிவித்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் ஒன்றாக நீலகிரி மலை ரெயில் உள்ளது. இந்த மலை ரெயில் யுனெஸ்கோ அமைப்பின் பாரம்பரிய அந்தஸ்தை பெற்று உள்ளது. மலை ரெயி லில் பயணம் செய்வது குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் மகிழ்ச்சியை தரும் பயணமாக உள்ளது. குன்னூர்-மேட்டுப்பாளையம் ரெயில்பாதை மலைகளை குடைந்து அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் மழைக்காலங்களில் ரெயில்வே தண்டவாளங்களில் மண் சரிவு, பாறை விழுதல் போன்ற சம்ப வங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் தென்னக ரெயில்வேயின் சேலம் கோட்ட மேலாளர் சுப்பராவ் சிறப்பு ரெயில் மூலம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு நேற்று வந்தார். பின்னர் ஹில்குரோவ் ரெயில் நிலையம் மற்றும் ரன்னிமேடு ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தார். அதன்பிறகு ஊட்டிக்கு புறப்பட்டு சென்றார்.
ஊட்டி ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வேக்கு சொந்தமான ஓட்டல், நடைபாதை, ரெயில் நிலைய அதிகாரி அலுவலகம், ரெயில்வே போலீஸ் நிலையம் போன்றவற்றை ஆய்வு செய்தார். ஊட்டி ரெயில் நிலைய பணியாளர்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் ரெயில்வே பூங்காவையும் பார்த்து ரசித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட மலை ரெயில் பாதைகள், குன்னூர், அருவங்காடு, கேத்தி ஆகிய ரெயில் நிலையங்கள் பாரம்பரியம் மாறாமல் அழகாக உள்ளது. ரன்னிமேடு, ஹில்குரோவ் ரெயில் நிலையங்கள் விரைவில் புதுப்பிக்கப்படும்.
ஹில்குரோவ் ரெயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகளுக்காக கேண்டீன் வசதி ஏற்படுத்தி தரப்படும். நீலகிரி மலை ரெயிலை மேம்படுத்த புதிதாக தயாராகி வரும் 15 பெட்டிகள் கொண்ட இரண்டு லோகோ என்ஜின்கள் விரைவில் கொண்டு வரப்படும். மலை ரெயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் நலனுக்காக கோவையில் இருந்து தற்போது புளுமவுண்டன் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்கு தினமும் இயக்கப்படுகிறது. இதுபோன்ற மேலும் ஒரு ரெயிலை இயக்க வேண்டும் என்று ஊட்டியை சேர்ந்தவர்கள் கேட்டு உள்ளார்கள். இது நல்ல யோசனை. இதுகுறித்து நான் சென்னை ரெயில்வே அதிகாரிகளுக்கு தெரிவிக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது ஊட்டி ரெயில் நிலைய அதிகாரி பிரமோத் உடனிருந்தார்.
Related Tags :
Next Story