வாலிபர்கள் இடையே தகராறு: போலீசாரை கண்டித்து சாலைமறியல் 40 பேர் மீது வழக்குப்பதிவு


வாலிபர்கள் இடையே தகராறு: போலீசாரை கண்டித்து சாலைமறியல் 40 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 10 May 2018 4:00 AM IST (Updated: 10 May 2018 2:17 AM IST)
t-max-icont-min-icon

வாலிபர்கள் இடையே தகராறு ஏற்பட்டதில், ஒரு தரப்பினர் ஆலங்குடி போலீசாரை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 25). ஆலங்குடி கலிபுல்லா நகரை சேர்ந்தவர் முகமது அப்துல்லா (36). இவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக முருகானந்தம் ஆலங்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த முருகானந்தம் ஆதரவாளர்கள் கலிபுல்லா நகருக்கு நேற்று முன்தினம் இரவு பூட்டியிருந்த கடைகளையும், பெயர் பலகைகளையும் அடித்து நொறுக்கி சூறையாடியதாக தெரிகிறது. இதனால் கலிபுல்லா நகரை சேர்ந்த ஒரு தரப்பினர் ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை.

40 பேர் மீது வழக்குப்பதிவு

இதனால் ஆத்திரமடைந்த கலிபுல்லா நகரை சேர்ந்த சிலர் நேற்று முன்தினம் ஆலங்குடி-வடகாடு முக்கத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்குடி போலீசார் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து நேற்று காலை ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல் முத்தலிபு, 2 தரப்பினரையும் அழைத்து சமாதான கூட்டத்தை நடத்தினார். இதில் தொடர்ச்சியாக இருந்து வரும் கருத்து வேறுபாடு சம்பந்தமாக இரு தரப்பினரிடையே எவ்வித மோதல் சம்பவங்களும் இனிமேல் நடைபெற கூடாது. மேலும் இனிமேல் எவரேனும் பிரச்சினையில் ஈடுபட்டால் உடனடியாக போலீசாரை அணுகி புகார் கொடுக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் ஆட்களை சேர்த்து கொண்டு பிரச்சினையில் ஈடுபடக் கூடாது எனவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. 

Next Story