பி.ஏ.பி. கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க மண் பரிசோதனை, விவசாயிகள் மகிழ்ச்சி


பி.ஏ.பி. கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க மண் பரிசோதனை, விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 10 May 2018 3:45 AM IST (Updated: 10 May 2018 2:19 AM IST)
t-max-icont-min-icon

பி.ஏ.பி. கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க மண் பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தளி,

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும் வகையில் திருமூர்த்தி அணையிலிருந்து பி.ஏ.பி. கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த கால்வாய் கரைகள் பல பகுதிகளில் சேதமடைந்துள்ளது.

இதனால் அதிக அளவில் நீர் இழப்பு ஏற்படுகிறது. மேலும் பெயரளவுக்கு மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளால் பலனில்லை எனவும் கால்வாய்களை முழுமையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்கள்.

இந்த நிலையில் பி.ஏ.பி. கால்வாய்களில் முழுமையாக நவீன முறையில் கான்கிரீட் தளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான மண்பரிசோதனை தற்போது நடைபெற்று வருகிறது. மண் தன்மை ஆய்வு கோட்ட செயற்பொறியாளர் பாண்டியன் தலைமையிலான குழுவினர் திருமூர்த்தி மலையை அடுத்த பங்களாமேடு பகுதியில் மண் பரிசோதனையை தொடங்கினர்.

கால்வாயின் கரைகள் மற்றும் அடிப்பகுதியில் குறிப்பிட்ட அளவுக்கு துளைகள் அமைத்து குறிப்பிட்ட ஆழங்களிலுள்ள மண் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் தீபாலப்பட்டி ஏழுகிணறு பகுதி வரையிலான 7 கிலோமீட்டர் தூரத்துக்கு முதல் கட்ட மண் பரிசோதனைக்கான மண் மாதிரிகள் சேகரிக்கும் பணிகள் நடைபெற உள்ளது.

இவ்வாறு சேகரிக்கப்படும் மண்மாதிரிகள் சென்னை சேப்பாக்கம் மண் தன்மை ஆய்வுக்கோட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். அதன் முடிவுகள் அடிப்படையில் பி.ஏ.பி. கால்வாயில் கான்கிரீட் கரைகள் அமைப்பதற்கான திட்ட வரைவு தயாரிக்கப்பட உள்ளது. அதன் பிறகு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு பணிகள் தொடங்கும் எனத்தெரிகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் “கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைக்கு பலன் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இதேபோல் 127 கிலோமீட்டர் நீள ஒட்டுமொத்த கால்வாய்க்கும் விரைவில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தாமதமின்றி நிதி ஒதுக்கி பணிகளை தொடங்க வேண்டும் ஏனெனில் மழையளவு குறைந்து பாசன பரப்பு அதிகரித்து விவசாயத்துக்கு போதிய தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது.

இந்த நிலையில் சேதமடைந்த கால்வாய் கரைகளால் அதிக அளவில் நீர் இழப்பு ஏற்படுவது விவசாயிகளை மேலும் அவதிக்குள்ளாக்குகிறது. எனவே நீர் இழப்பை தவிர்க்கும் வகையில் கான்கிரீட் கரைகள் மற்றும் தரைத்தளம் அமைக்கப்படும் என்ற செய்தி மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. என்று விவசாயிகள் கூறினர்.

Next Story