தூய்மை பாரத கோடை கால பயிற்சி முகாம் மாணவர்கள் ஆர்வமாக கலந்துகொள்ள கலெக்டர் வேண்டுகோள்
நெல்லை மாவட்டத்தில் தூய்மை பாரத கோடை கால பயிற்சி முகாம் நடந்து வருவதாகவும், இதில் மாணவர்கள் ஆர்வமாக கலந்து கொள்ளும்படியும் கலெக்டர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் தூய்மை பாரத கோடை கால பயிற்சி முகாம் நடந்து வருவதாகவும், இதில் மாணவர்கள் ஆர்வமாக கலந்து கொள்ளும்படியும் கலெக்டர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கோடைகால பயிற்சி முகாம்
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், குடிநீர் மற்றும் சுகாதார துறை அமைச்சகத்துடன் இணைந்து நடத்தும் ‘தூய்மை பாரத கோடை கால முனைப்பு முகாம்-2018‘ கடந்த 1-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. வருகிற ஜூலை மாதம் 31-ந்தேதி வரை முகாம் நடத்தப்பட உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், நேரு யுவகேந்திரா இளையோர் மன்றங்கள் மற்றும் தனிநபர்கள் கலந்து கொள்ளும் வகையில் தூய்மை பாரத கோடை கால பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
இணையதளத்தில்...
இதில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களில் ஒருவரை பொறுப்பு அலுவலராக நியமித்து அவர் மூலம் பங்கேற்க உள்ள கல்வி நிறுவனங்களின் விவர விண்ணப்ப படிவ நடைமுறைகளை (https://sbsi.my-g-ov.in) இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேற்கொண்டு பணி செய்ய ஆர்வமுள்ள கல்வி நிறுவனங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பஞ்சாயத்துக்களை தேர்வு செய்யலாம்.
கிராம பகுதிகளில் திட திரவ கழிவு மேலாண்மை முறையாக பராமரித்தல், குப்பைகளை முறையாக பிரித்தெடுத்து உரமாக்குதல், சுற்றுப்புற சுகாதாரம் பேணுதல், கழிவறை தொடர் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு, தெரு நாடகங்கள், ஆடல் பாடல் கலைநிகழ்வுடன் கூடிய விழிப்புணர்வு, நேரடி மக்கள் சந்திப்பு, சுகாதார விழிப்புணர்வு சுவர் சித்திரம் வரைதல், குறும்படங்கள் திரையிடுதல், கண்காணிப்பு குழுக்கள் போன்றவை முகாம்களில் இடம்பெறும். இதன்மூலம் திறந்தவெளி மலம் கழித்தலை ஒழித்தல் போன்றவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாணவனும் குறைந்தபட்சம் 100 மணி நேரம் தூய்மை நிகழ்வில் பங்கேற்க செய்யலாம்.
சிறந்த மாணவர்களுக்கு பரிசு
இதில் சிறப்பாக சாதனை புரிந்த மாணவர்களுக்கு கல்லூரி அளவில் சம்பந்தப்பட்ட துறை மூலம் வழங்கப்படும் கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். பல்கலைக்கழக அளவில் முதல் பரிசாக ரூ.30 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.20 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மாநில அளவிலான முதல் பரிசு ரூ.50 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.30 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். தேசிய அளவில் முதல் பரிசு ரூ.2 லட்சம், 2-வது பரிசு ரூ.1 லட்சம், 3-வது பரிசு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். முகாமில் மாணவர்கள் ஆர்வமாக கலந்துகொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story