ஊரக வேலை உறுதி திட்டத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளையும் செய்ய வேண்டும் - அமைச்சர் கமலக்கண்ணன் வேண்டுகோள்
ஊரக வேலை உறுதி திட்டத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளையும் செய்ய வேண்டும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
காரைக்கால்,
காரைக்கால் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஊரக வேலை உறுதி திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் காமராஜர் அரசு வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் ருத்ரகவுடு, மாவட்ட கலெக்டர் கேசவன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், வட்டார வளர்ச்சி அதிகாரி பிரேமா, பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் கமலக்கண்ணன் பேசியதாவது:- ஊரக வேலை உறுதி திட்டத்தில் பயனாளிகளுக்கு குறைவான நாட்களே வேலை தருவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதனை சரி செய்யும் வகையில் இந்த ஆண்டு அதிகமான நாட்கள் வேலை தர ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டுள்ளது. இப்பணியில் வழக்கமான வாய்க்கால் தூர்வாருவது உள்பட பல்வேறு பணிகளையும் மேற்கொள்ளவேண்டும்.
நாகை, திருவாரூர் போன்ற ஊர்களில் 100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு பணிகளை செய்கிறார்கள். இந்த ஊர்களுக்கு காரைக்கால் அதிகாரிகள் நேரில் சென்று விவரம் அறிந்து வந்து, இங்குள்ளோருக்கு அப்பணிகள் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும்.
100 நாள் வேலையில் அங்கன்வாடி கட்டிடம் கட்டுதல், பள்ளிக்கூடச் சுவர் எழுப்புதல், ஆடு மற்றும் மாட்டுக்கொட்டகை அமைத்தல் போன்ற பணிகளை செய்யலாம். இதற்கான நடவடிக்கையை மாவட்ட கலெக்டர் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story