மத்திய அரசு தொடர்ந்து நிராகரிப்பு: கிரண்பெடி பதவி விலக வேண்டும், நாராயணசாமி வலியுறுத்தல்


மத்திய அரசு தொடர்ந்து நிராகரிப்பு: கிரண்பெடி பதவி விலக வேண்டும், நாராயணசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 May 2018 5:00 AM IST (Updated: 10 May 2018 2:40 AM IST)
t-max-icont-min-icon

கவர்னர் கிரண்பெடியின் கோரிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து நிராகரிப்பதால் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தினார்.

புதுச்சேரி,

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த மாநிலத்தின் நிர்வாகி (கவர்னர்) விதிமுறைகள் தெரியாமல் உள்ளார். ஐ.ஏ.எஸ். அதிகாரியான நரேந்திரகுமார் புதுவை மாநில பணிக்கு வந்தபோது அவருக்கு ஒதுக்கப்படும் துறைகள் குறித்து தலைமை செயலாளர் தலைமையிலான குழு முடிவு செய்து எனக்கு கோப்பினை அனுப்பி வைத்தது. அதனை நான் கையெழுத்திட்டு நிர்வாகிக்கு அனுப்பினேன்.

அதில் தன்னிச்சையாக மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்குமாறு நிர்வாகி கூறினார். தலைமை செயலாளர் தலைமையிலான குழு முடிவு செய்து நான் கையெழுத்திட்டு அனுப்பியதில் மாற்றம் செய்ய அவருக்கு அதிகாரம் இல்லை.

மாநில நிர்வாகத்தை நடத்த முதல்-அமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் அதிகாரம் உண்டு. மத்திய, மாநில அரசுகள் தொடர்புடையது என்றால்தான் அவர் கருத்தை தெரிவிக்கவேண்டும். மாநில நிர்வாகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நிர்வாகி அமைச்சரவையின் பரிந்துரைப்படிதான் செயல்பட வேண்டும். அவருக்கு நேரடியாக உத்தரவிடும் அதிகாரம் எதுவும் கிடையாது.

விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக அரசு எடுத்த முடிவுக்கு இவர் ஒப்புதல் அளிக்கவில்லை. ஆனால் இதுதொடர்பாக நான் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதை தொடர்ந்து கடன் தள்ளுபடிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. வாரிய தலைவர் பதவி நீட்டிப்பு விவகாரத்திலும் அனுமதி மறுத்தார். மத்திய அரசிடம் புகார் செய்ததையடுத்து மத்திய அரசு பதவி நீட்டிப்புக்கு அனுமதி அளித்தது.

அதன்பிறகும் வாரிய தலைவர்கள் பதவிக்கு அவர் நிபந்தனை விதித்தார். இதுதொடர்பாக நான் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினேன். இப்போதும் நிர்வாகியின் முடிவுகளை மத்திய அரசு நிராகரித்து அமைச்சரவையின் முடிவினை உறுதி செய்துள்ளது.

மாநில நிர்வாகி என்பவர் மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர். அவர் எடுக்கும் முடிவினை மத்திய அரசு நிராகரித்துவிட்டால் மத்திய அரசுக்கு அவர் மீது நம்பிக்கை இல்லை என்றுதான் அர்த்தம். இதுபோன்ற நிலையில் பல கவர்னர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். சமீபத்தில் கூட டெல்லியில் கவர்னர் ராஜினாமா செய்தார்.

புதுவையில் நிர்வாகி எடுத்த முடிவினை 3 முறை மத்திய அரசு நிராகரித்து உள்ளது. இத்தகைய சூழலில் கிரண்பெடியின் நிலை என்ன? அவர் என்ன செய்யப்போகிறார்? ஒரு புகார் நிர்வாகிக்கு சென்றால் அதனை சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு அனுப்பி விசாரித்து அறிக்கை பெறவேண்டும். அதுதான் நிர்வாகிக்கான அதிகாரம்.

ஆனால் அமைச்சரவையை கலந்தாலோசிக்காமல், அதிகாரிகளை கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் நிர்வாகிக்கு கிடையாது. அதனால்தான் அவரது முடிவுகளை மத்திய அரசு ரத்து செய்கிறது. உண்மையிலேயே மத்திய அரசு அவரை அவமதிப்பதை சிந்தித்து பார்க்கவேண்டும். இனிமேலும் இந்த பதவியில் நீடிக்க வேண்டுமா? இல்லையா? என்பதை அவர் முடிவு செய்ய வேண்டும்.

ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம். எனவே நிர்வாகி கிரண்பெடி புதுவையில் ஆதிக்கம் செலுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

அதைத்தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதே?

பதில்:- கோர்ட்டு தீர்ப்பு நகல் எங்களுக்கு இன்னும் வரவில்லை. அதை பார்த்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி:- காலாப்பட்டு தனியார் தொழிற்சாலை விரிவாக்கம் தொடர்பாக கலவரம் வெடித்துள்ளதே?

பதில்:- மத்திய அரசின் உத்தரவு அடிப்படையில் சுற்றுச்சூழல் துறை கலெக்டர் தலைமையில் கருத்துகேட்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. சிலர் அங்கு ஆட்களை அழைத்து வந்து பிரச்சினை செய்து கூட்டத்தை தடை செய்துள்ளனர். கருத்துகளை கூற அனைவருக்கும் உரிமை உண்டு. இந்த தொழிற்சாலைக்கு மத்திய அரசு அனுமதி தராவிட்டால் நாங்களும் அனுமதி தரமாட்டோம். அதற்காக சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு கலாட்டா செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை. அவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்.

கேள்வி: புதுவையில் சமீப காலமாக குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதே?

பதில்: மாகியில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது அரசியல் ரீதியிலான கொலை. குருசுக்குப்பம் பகுதியிலும் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் அரசியல் இல்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள். சமீப காலமாக திருட்டு சம்பவங்கள் சிலவும் நடந்துள்ளன. எனவே போலீஸ் ரோந்தை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Next Story