சம்பளம் வழங்கக்கோரி ரேஷன் கடை ஊழியர்கள் திடீர் போராட்டம்


சம்பளம் வழங்கக்கோரி ரேஷன் கடை ஊழியர்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 10 May 2018 4:15 AM IST (Updated: 10 May 2018 2:40 AM IST)
t-max-icont-min-icon

சம்பளம் வழங்கக்கோரி ரேஷன் கடை ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

புதுவையில் சிவப்பு நிற ரேஷன் கார்டுகளுக்கு 20 கிலோ அரிசியும், மஞ்சள் நிற ரேஷன் கார்டுகளுக்கு 10 கிலோ இலவச அரிசியும் வழங்கப்பட உள்ளது. இந்த அரிசியின் தரம் குறித்து ஆய்வு நடத்தி சான்றிதழ் வழங்கிய பிறகே இலவச அரிசி வினியோகிக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி புதுவை பகுதிகளில் இருந்து வாங்கப்பட்ட இலவச அரிசியின் தரம் குறித்து குடிமைப்பொருள் வழங்கல்துறையின் இயக்குனர் வல்லவன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதன்பின் அரிசி ரேஷன் கடைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்தநிலையில் கடந்த 17 மாதங்களுக்கான சம்பளம் வழங்கப்படவில்லை. அதனை வழங்கும் வரை ரேஷன் கடைகளை திறந்து அரிசியை இறக்க அனுமதிக்கமாட்டோம் என்று கூறி நியாய விலைக்கடை கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி இளங்கோ நகரில் உள்ள கூட்டுறவு அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டனர்.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் நிர்வாக அதிகாரி ஜோதிராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இன்னும் 10 நாட்களில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதை ஏற்று பிற்பகல் 2 மணி அளவில் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

Next Story