புதுச்சேரி அருகே டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடி பஸ்- கார் விபத்து: சாலையோரம் செல்போனில் பேசியவர் பலி


புதுச்சேரி அருகே டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடி பஸ்- கார் விபத்து: சாலையோரம் செல்போனில் பேசியவர் பலி
x
தினத்தந்தி 10 May 2018 3:30 AM IST (Updated: 10 May 2018 2:40 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி அருகே டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய பஸ் கார் மீது மோதியது. இந்த கார் மோதியதில் சாலையோரத்தில் செல்போனில் பேசிக் கொண்டிருந்தவர் பலியானார்.

வானூர்,

புதுவையில் இருந்து சென்னைக்கு நேற்று மதியம் தமிழக அரசு பஸ் ஒன்று புறப்பட்டுச் சென்றது. புதுச்சேரியை அடுத்த வானூர் அருகே பொம்மையர்பாளையம் மெயின்ரோட்டில் சென்றபோது பஸ்சின் முன்சக்கர டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற கார் மீது மோதி ரோட்டைவிட்டு இறங்கி நின்றது. பஸ் மோதியதில் நிலை தடுமாறிய கார் சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக்கொண்டு இருந்தவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கனகசெட்டிகுளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக செத்தார்.

விசாரணையில் அவர் கடலூர் பழைய நகரை சேர்ந்த முத்துலிங்கம் (வயது 48) என்பது தெரியவந்தது. உறவினர் ஒருவரின் திருமணத்துக்கான பத்திரிகையை அனுமந்தையில் உள்ள அச்சகத்தில் இருந்து வாங்குவதற்காக வந்து இருந்தபோது இந்த விபத்தில் சிக்கி பலியானதும், அவருடன் வந்த அவரது மகன் மோகன்ராஜ் காயமின்றி தப்பியதும் தெரியவந்தது.

மேலும் பஸ்சில் பயணம் செய்த 5 பேரும் காயமடைந்தனர். அவர்களுக்கு பிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story