பூந்தமல்லியில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருட முயன்றவரை மடக்கி பிடித்த மாணவர்
பூந்தமல்லியில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருட முயன்ற நபரை மாணவர் மடக்கி பிடித்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் அந்த நபருக்கு தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
பூந்தமல்லி,
பூந்தமல்லி திருமால் நகர் பிரதான சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் சீனிவாசன்(வயது 45). டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரேகா(40). இவர், அந்த பகுதியில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுடைய மகன் சரவணன்(16). இவர், 11-ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார்.
நேற்று காலை கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் சரவணன் மட்டும் தனியாக இருந்தார். நேற்று மதியம் வீட்டை பூட்டி விட்டு ஏ.டி.எம்-ல் பணம் எடுத்து விட்டு திரும்பி வந்தார்.
பொதுமக்கள் தர்மஅடி
அப்போது வீட்டின் கதவு திறந்த நிலையிலும், வீட்டின் உள்ளே ஆள் நடமாட்டம் இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த சரவணன், உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் உள்ளே குடிபோதையில் இருந்த மர்மநபர் ஒருவர், சரவணனை கீழே தள்ளி விட்டு வெளியே தப்பிச்செல்ல முயன்றார்.
ஆனால் சுதாரித்துக்கொண்ட சரவணன், அந்த நபரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினார். மேலும் திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் ஓடி வந்து அந்த நபரை மடக்கி பிடித்து, தர்மஅடி கொடுத்து அவரது கையை கட்டிப்போட்டனர்.
திருட முயற்சி
இது குறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், அந்த நபரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
சரவணன் வீட்டை பூட்டி விட்டு சாவியை தாங்கள் வழக்கமாக வைக்கும் இடத்தில் வைத்து விட்டு ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க சென்று விட்டார். அப்போது அங்கு வந்த மர்மநபர், வீடு பூட்டி இருப்பதை கண்டு சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே புகுந்து உள்ளார். பின்னர் பீரோவை திறந்து நகை, பணத்தை திருட முயன்றபோது, சரவணன் வந்து விட்டதால் அவரை தள்ளிக்கொண்டு தப்பி ஓட முயன்றார். ஆனால் அவர் மடக்கி பிடித்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தது விசாரணையில் தெரிய வந்தது.
பிடிபட்ட நபரின் பெயர், ஊர் எதுவும் தெரியவில்லை. பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்ததாலும், அவர் குடிபோதையில் இருப்பதாலும், அவரிடம் விசாரிக்க முடியவில்லை. போதை தெளிந்த பிறகே அவரிடம் விசாரணை நடத்த முடியும் என போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story