ஊரகவேலை உறுதிதிட்ட தொழிலாளர்களுக்கு பணி வழங்காவிட்டால் தொடர் போராட்டம்


ஊரகவேலை உறுதிதிட்ட தொழிலாளர்களுக்கு பணி வழங்காவிட்டால் தொடர் போராட்டம்
x
தினத்தந்தி 10 May 2018 4:15 AM IST (Updated: 10 May 2018 2:54 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் ஊரகவேலை உறுதிதிட்ட தொழிலாளர்களுக்கு பணி வழங்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய தொழிலாளர் சங்க மாநாட்டில் பாலபாரதி பேசினார்.

தர்மபுரி,

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட மாநாடு அரூரில் நடைபெற்றது. மாநாட்டின் ஒருபகுதியாக அரூர் ரவுண்டானா அருகே நடந்த பொதுக்கூட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் அருச்சுனன் தலைமை தாங்கினார். முருகன் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் குமார், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முத்து, வரவேற்புகுழு தலைவர் வீரபத்திரன், நிர்வாகிகள் மல்லிகா, தங்கராசு, ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். முன்னதாக அரூர் 4-ரோட்டில் தொடங்கிய ஊர்வலத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டசெயலாளர் ஆறுமுகம் தொடங்கி வைத்தார்.

மாநாட்டு பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலபாரதி கலந்து கொண்டு பேசியதாவது:-

கடந்த 20 ஆண்டுகளாக பருவமழை சரியாக பெய்யாததால் கிராமங்கள் வறட்சியை நோக்கி சொல்கின்றன. வறட்சியால் விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் வறுமையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த சூழலில் விவசாய தொழிலாளர்கள் கந்துவட்டி கொடுமைக்கு ஆளாகிறார்கள். விவசாய தொழிலாளர்களுக்கு சொந்த வீடு, சொந்த நிலம் இல்லை. இவர்களை வறுமையில் இருந்து மீட்கவே அகிலஇந்திய விவசாய தொழிலாளர் சங்கம் போராடி வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதிதிட்டம் தற்போது முறையாக செயல்படுத்தப்படாமல் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு பணி வழங்காவிட்டால் மாவட்டம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

வறட்சி நிவாரணம்

இதைத்தொடர்ந்து நடந்த பிரதிநிதிகள் மாநாட்டை சங்க மாநில துணைதலைவர் கணபதி தொடங்கி வைத்து பேசினார். மாநில செயலாளர் அமிர்தலிங்கம் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். மாநாட்டில் சங்கத்தின் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தர்மபுரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும். நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு நிலம் வழங்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் நிலவிவரும் குடிநீர் பிரச்சனையை தீர்க்கவேண்டும். ஆறு, ஏரி,குளம்,குட்டைகளை தூர்வாரி நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். வேளாண்மை சார்ந்த தொழில்களுக்கு முக்கியமளிக்கும் தொழிற்பேட்டைகளை தர்மபுரி மாவட்டத்தில் உருவாக்க வேண்டும். 60 வயது பூர்த்தியடைந்த தொழிலாளர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு வங்கிகளில் மானியத்துடன் கறவை மாட்டு கடன் வழங்கவேண்டும், உள்பட பல தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. இதில் விவசாய தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story