‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ் வில்லிவாக்கம் ஏரி புனரமைப்பு பணி தொடங்கியது
வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் உள்ள வில்லிவாக்கம் ஏரி புனரமைக்கப்படுகிறது.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சியில் 206 குளம் மற்றும் ஏரிகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 32 குளங்கள் மற்றும் ஏரிகள் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ் புனரமைக்கப்பட உள்ளது. அதன்படி வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் உள்ள வில்லிவாக்கம் ஏரி ரூ.16 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படுகிறது. இந்த பணியை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்தத் திட்டத்தினால் வில்லிவாக்கம் ஏரி தூர்வாரப்பட்டு 5 மீட்டர் வரை ஆழப்படுத்தப்படுவதால் ஏரியின் கொள்ளளவு அதிகமாகிறது. ஏரிக்கு அருகே உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். ஏரியை சுற்றியுள்ள காலி நிலப்பரப்பில் பொழுதுப்போக்கு வசதிகள் ஏற்படுத்தப்படும். கழிவுநீர் ஏரிக்குள் வருவது தடுக்கப்பட்டு ஏரி மாசு அடையாமல் தடுக்கப்படும். இதன் மூலம் வில்லிவாக்கம், கொரட்டூர், அண்ணாநகர், அம்பத்தூர் பகுதிகளை சார்ந்த மக்களுக்கு மிகவும் பயனுள்ள பொழுதுப்போக்கு சுற்றுலா இடமாக இது விளங்கும்.
சென்னையில், உள்ள ஏரிகள் மற்றும் குளங்களை புனரமைக்க, சமூக அக்கறையுள்ள வணிக பொது நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான சிறப்பு கூட்டம் ரிப்பன் மாளிகையில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
மேற்கண்ட தகவல்கள் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story