தேர்தல் தோல்விகளை மறைக்க காங்கிரஸ் கட்சியினர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது பழி சுமத்துகிறார்கள்


தேர்தல் தோல்விகளை மறைக்க காங்கிரஸ் கட்சியினர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது பழி சுமத்துகிறார்கள்
x
தினத்தந்தி 10 May 2018 4:30 AM IST (Updated: 10 May 2018 3:58 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் தோல்விகளை மறைக்கவே காங்கிரஸ் கட்சியினர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது பழி சுமத்துகிறார்கள் என்று மோடி குற்றம்சாட்டினார்.

சிக்கமகளூரு, மே.10-

தேர்தல் தோல்விகளை மறைக்கவே காங்கிரஸ் கட்சியினர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது பழி சுமத்துகிறார்கள் என்று மோடி குற்றம்சாட்டினார்.

மோடி வருகை

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 12-ந்தேதி நடக்கிறது. தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் கர்நாடகத்தில் முகாமிட்டு தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், பிரதமர் மோடி நேற்று கோலார் மாவட்டம் பங்காருபேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு ஹெலிகாப்டரில் சிக்கமகளூருவுக்கு வந்தார். மதியம் 1.30 மணிக்கு சிக்கமகளூரு சுபாஷ் சந்திரபோஷ் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேட் தளத்தில் வந்து இறங்கினார். பின்னர் அங்கு நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசியதாவது:-

சாதி, மதங்கள் இடையே பிளவு

சிருங்கேரி சாரதம்மன், கொரநாடு அன்னபூர்ணேஸ்வரி, பாபாபுடன் கிரி தத்தாத்திரிய சாமி, பாலேஒன்னூர் ரம்பாபுரி மடம் ஆகியவற்றை வணங்குகிறேன். இது சங்கராச்சாரியார் வாழ்ந்த புண்ணிய பூமியாகும். சாதி, மதங்கள் இடையே பிளவை ஏற்படுத்தி காங்கிரஸ் கட்சி ஆதாயம் தேட முயற்சிக்கிறது. காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் நேரத்தில் மட்டுமே கோவில்கள், மடங்களுக்கு செல்கிறார்கள். இது மக்களை ஏமாற்றும் செயல்.

கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்யும் ராகுல்காந்தி, கர்நாடக காங்கிரஸ் அரசு ஏராளமான வளர்ச்சி பணிகளை செய்துள்ளதாக கூறுகிறார். ஆனால் மாநிலத்தில் எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மாநில அரசு சரியாக பயன்படுத்தவில்லை. மத்திய அரசின் நிதியை முறைகேடு செய்துவிட்டு, மக்களிடம் பொய்யான தகவல்களை காங்கிரஸ் கட்சியினர் பரப்பி வருகிறார்கள்.

திசை திருப்ப முயற்சி

அடுத்த ஆண்டு (2019) நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் தானே பிரதமராக பதவி ஏற்பேன் என்று ராகுல்காந்தி கூறுகிறார். காங்கிரஸ் கட்சியில் பிரதமர் நாற்காலிக்கு ஒரே குடும்பம் தான் போட்டியிட்டு வருகிறது. பல ஆண்டுகளாக கடுமையாக உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை. 2004-ம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் கட்சி இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமாக தோல்வி அடைந்து வருகிறது.

ஆனாலும், காங்கிரஸ் கட்சியினர் தோல்வியை ஒப்புகொள்வது கிடையாது. அவர்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது பழி சுமத்துகிறார்கள். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் எந்த முறைகேடும் நடக்காத வண்ணம் தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது. ஆனாலும், காங்கிரஸ் கட்சி தோல்வியை மறைக்கவே இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு, மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள்.

தோல்வி உறுதி

பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் பயங்கரவாதிகளுடன் போரிட்டு தக்க பதிலடி கொடுத்தாலும், வீரர்கள் வீரமரணம் அடைந்தாலும் காங்கிரஸ் கட்சி அனைத்தையும் குறை கூறி தான் வருகிறது. போலி வாக்காளர்களை உருவாக்கி, வெற்றி பெற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. பல இடங்களில் போலி வாக்காளர்கள் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் இருந்தே காங்கிரஸ் கட்சி தோல்வி பயத்தில் உள்ளது தெரியவருகிறது. சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வி பயத்தில் தான் சித்தராமையா பாதாமி தொகுதிக்கு சென்றார். ஆனால், பாதாமி தொகுதியில் அவருடைய முகம் யாருக்கும் தெரியாது. இதனால் சித்தராமையா, சாமுண்டீஸ்வரி, பாதாமி தொகுதிகளில் தோல்வி அடைவது உறுதி.

5 நதிகள் உருவாகும் நகரமாக சிக்கமகளூரு இருந்தாலும், அங்கு தற்போது வறட்சி ஏற்பட்டுள்ளது. இங்கு நீர்ப்பாசன திட்டத்துக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பத்ரா கால்வாய் திட்டம், எடியூரப்பாவின் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியினர், பத்ரா கால்வாய் திட்டம் தங்கள் ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாக கூறி வருகிறார்கள். விவசாயிகளின் நலனுக்காக பா.ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

சிக்கமகளூரு, ஹாசன் மாவட்டங்களை சேர்ந்த பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரசாரம் மேற்கொண்டார். மோடி வருகையையொட்டி சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story