கோடை விடுமுறையையொட்டி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் திருட்டை தடுக்க தீவிர கண்காணிப்பு
கோடை விடுமுறையையொட்டி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நகை பறிப்பு மற்றும் திருட்டை தடுக்க தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சூரமங்கலம்,
சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி பகுதிகளில் தினமும் 200-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பல ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகிறார்கள். மேலும், பண்டிகை காலத்திலும், கோடை காலத்திலும் ரெயில்களில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை இருமடங்கு அதிகரித்து காணப்படும். இதற்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டாலும், அனைத்து ரெயில் நிலையங்களிலும் கூட்ட நெரிசல் அதிகளவில் இருப்பதை காணமுடியும்.
இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடைபெறும். அதன்படி தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் வட மாநில கொள்ளை கும்பல் தமிழகத்திற்குள் ஊடுருவி இருப்பதாக ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனால் அனைத்து ரெயில் நிலையங்களிலும் ரெயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
தனிப்படை அமைப்பு
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திலும் நகை பறிப்பு சம்பவங்களை தடுக்கவும், திருடர்களை பிடிக்கவும் ரெயில்வே போலீசார் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 10 போலீசார் ரெயில் நிலையத்திலும், சேலம் வழியாக செல்லும் அனைத்து ரெயில்களிலும் தீவிரமாக சோதனை மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து சேலம் ரெயில்வே போலீசார் கூறுகையில், கோடை விடுமுறையை குறி வைத்து நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டிகள் மற்றும் ஏ.சி.பெட்டிகளில் அதிகபடியான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர, ரெயில்களில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தீவிர ரோந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த நேரத்தில் தான் கொள்ளையர்கள் தங்களது கைவரிசையை காட்டுவார்கள். எனவே, ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படி நபர்கள் யாரேனும் நின்றிருந்தால் அவர்களை பிடித்து விசாரணை நடத்தப்படும், என்றனர்.
Related Tags :
Next Story