10 ஆயிரம் போலி வாக்காளர் அட்டை பறிமுதல் எதிரொலி ஆர்.ஆர்.நகர் தொகுதி தேர்தல் தள்ளிவைப்பு? இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்


10 ஆயிரம் போலி வாக்காளர் அட்டை பறிமுதல் எதிரொலி ஆர்.ஆர்.நகர் தொகுதி தேர்தல் தள்ளிவைப்பு? இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்
x
தினத்தந்தி 10 May 2018 4:18 AM IST (Updated: 10 May 2018 4:18 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் (ராஜராஜேஸ்வரி நகர்) ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 10 ஆயிரம் போலி வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் கர்நாடக சட்டசபை தேர்தலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு, 

பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் (ராஜராஜேஸ்வரி நகர்) ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 10 ஆயிரம் போலி வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் கர்நாடக சட்டசபை தேர்தலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போலி வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் தொடர்பாக கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் பெங்களூருவில் நேற்று ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:-

போலி அட்டைகள்

“224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 12-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் மரணம் அடைந்ததால், அங்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. இந்த நிலையில் பெங்களூரு ஆர்.ஆர். நகர் தொகுதிக்கு உட்பட்ட ஜாலஹள்ளியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் வாக்காளர் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

அதன்பேரில் நான் அந்த வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினேன். அந்த கட்டிடம் மஞ்சுளா நஞ்சமரி என்பவருக்கு சொந்தமானது. அது ராகேஷ் என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சோதனையில் 9,746 போலி வாக்காளர் அடையாள அட்டைகள் பதுக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அடையாள அட்டைகள் கட்டுக்கட்டாக கட்டப்பட்டு ஒரு பையில் போட்டு வைக்கப்பட்டு இருந்தது.

5 மடிக்கணினிகள்

அதில் சிலரது பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் எழுதப்பட்டு இருந்தன. அங்கு இன்னும் சில அடையாள அட்டைகள் இருந்தது என்றும், அதை சிலர் எடுத்துச் சென்றுவிட்டதாகவும் என்னிடம் கூறினர். அங்கு 5 மடிக்கணினிகள், ஒரு அச்சு எந்திரம் இருந்தது. வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவத்திற்கான ஒப்புகை சீட்டுகளும் அங்கு இருந்தன. இந்த ஒப்புகை சீட்டுகளின் எண்ணிக்கை சுமார் 1 லட்சம் இருக்கும். இவைகளை பறிமுதல் செய்துள்ளோம்.

முதல்கட்ட விசாரணையில் இந்த வாக்காளர் அடையாள அட்டைகள் உண்மையான வாக்காளர்களுக்கு சேர்ந்தது என்பது போல் உள்ளது. ஆயினும் முறையான விசாரணையின் மூலம் மட்டுமே அந்த அடையாள அட்டைகளின் உண்மை தன்மை குறித்து தெரியவரும். இந்த ராஜ ராஜேஸ்வரி நகர் தொகுதியில் 4 லட்சத்து 35 ஆயிரத்து 439 வாக்காளர்கள் உள்ளனர். இதுபற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. விசாரணை தொடங்கி இருக்கிறது. இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் தீவிரமாக எடுத்துக்கொண்டு இருக்கிறது. தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தில்...

பெங்களூரு ஆர்.ஆர். நகர் தொகுதியில் போலி வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் ஆளும் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. ஆர்.ஆர். நகர் தொகுதியில் தேர்தலை ஒத்திவைக்க கோரி மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் பா.ஜனதா மனு கொடுத்தது.

அதேபோல், இந்த விவகாரத்தில் பா.ஜனதாவுக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி மனு கொடுத்துள்ளது. இந்த நிலையில் டெல்லியில் நேற்று இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த்சர்மா தலைமையில் அக்கட்சி குழு மனு கொடுத்தது.

அதிகார பலத்தை பயன்படுத்தி...

அதில், கர்நாடக சட்டசபை தேர்தலில் மத்திய அரசு, தனது அதிகார பலத்தை பயன்படுத்தி முறைகேடுகளை செய்ய முயற்சி செய்வதாகவும், இதை தடுத்து நிறுத்துமாறும் கூறப்பட்டு இருந்தது. இந்த சந்திப்புக்கு பின் ஆனந்த்சர்மா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“காங்கிரஸ் தலைவர்கள் அடங்கிய குழுவினர், தேர்தல் அதிகாரிகளை நேரில் சந்தித்து ஒரு மனு கொடுத்தோம். மத்திய அரசு வருமான வரித்துறை உள்பட பல்வேறு அமைப்புகளின் துணையுடன் கர்நாடக சட்டசபை தேர்தலில் முறைகேடுகளை செய்ய பா.ஜனதா முயற்சி செய்து வருவது குறித்து நாங்கள் கூறி இருக்கிறோம். இது தேர்தல் நியாயமாகவும், நேர்மையாக நடைபெறுவதை தடுப்பதாக உள்ளது.

சதித்திட்டங்களை தீட்டி...

நள்ளிரவில் காங்கிரஸ் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தி சதித்திட்டங்களை தீட்டி வருகிறது. இதையெல்லாம் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கூறினோம். கர்நாடகத்தில் பா.ஜனதா தோல்வி பயத்தில் உள்ளது. அதன் காரணமாக பா.ஜனதா மிகப்பெரிய அளவில் பணத்தை பயன்படுத்தி வருகிறது.

போலி வாக்காளர் அடையாள அட்டை இருந்ததாக கூறப்பட்ட கட்டிடம் பா.ஜனதா பிரமுகருக்கு சேர்ந்தது. அந்த வீட்டில் தேர்தல் அதிகாரிகளோ அல்லது போலீசாரோ சோதனை நடத்தவில்லை. பா.ஜனதாவை சேர்ந்த பிரமுகர்களே சோதனை நடத்தி இருக்கிறார்கள். அந்த கட்டிடத்தில் வாடகைக்கு வசிப்பவரும் பா.ஜனதாவை சேர்ந்தவரே.”

இவ்வாறு ஆனந்த்சர்மா கூறினார்.

தேர்தல் ஒத்திவைப்பு?

அதுபோல் கர்நாடக பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் மாநில தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து, ஆர்.ஆர்.நகர் தொகுதியில் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் அந்த தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story