ஓமலூர் அருகே பட்டப்பகலில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்


ஓமலூர் அருகே பட்டப்பகலில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
x
தினத்தந்தி 10 May 2018 4:20 AM IST (Updated: 10 May 2018 4:20 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் அருகே பட்டப்பகலில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

ஓமலூர்,

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

இந்த நிலையில், நேற்று மதியம் சேலம் சித்தர் கோவில் பகுதியில் இருந்து காமலா புரம் கோவிலுக்கு செல்ல பெண் ஒருவர் பஸ்சில் வந்தார். அவர் பஸ்சில் ஆர்.சி.செட்டிபட்டி பஸ் நிறுத்தத்தில் இறங்கி காமலாபுரம் கோவிலுக்கு நடந்து சென்றார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் திடீரென்று அவரது கழுத்தில் கிடந்த 10 பவுன் நகையை பறித்து கொண்டு ஓட முயன்றான்.

வாலிபர் பிடிபட்டார்

உடனே சுதாரித்த அந்த பெண், திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பொதுமக்கள் அந்த வாலிபரை சுற்றி வளைத்து தாக்கினார்கள். பின்னர் அந்த வாலிபர் பிடிப்பட்ட தகவலை ஓமலூர் போலீசாருக்கு தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் ஓமலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பிடிபட்ட நபரை போலீசார் ஓமலூர் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு அவரிடம் விசாரித்த போது சக்திவேல்(வயது 33) என்றும், சென்னையில் இருந்து வந்ததாகவும், அம்மா சாப்பாடு போடவில்லை என்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் கூறி வருகிறார். அவர் உண்மையில் மனநலம் பாதிக்கப்பட்டவரா? அல்லது நகை பறித்த போது போலீசில் சிக்கி கொண்டதால் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடிக்கிறாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப்பகலில் பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் காமலாபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story