விளைச்சல் குறைவால் சேலத்தில் மாம்பழம் விலை 20 சதவீதம் அதிகரிப்பு
விளைச்சல் குறைவால் சேலத்தில் மாம்பழம் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
சேலம்,
சேலம் மார்க்கெட்டிற்கு மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர், வாழப்பாடி, நங்கவள்ளி, மேச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகளவில் மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதுதவிர, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் மாம்பழங்கள் சேலத்தில் உள்ள மொத்த குடோன்களுக்கு கொண்டு வரப்படுகிறது. சேலம் கடைவீதியில் உள்ள மார்க்கெட், செவ்வாய்பேட்டை, பால் மார்க்கெட், அஸ்தம்பட்டி-ஏற்காடு சாலை ஆகிய இடங்களில் சாலையோர தள்ளுவண்டிகளில் அதிகளவில் மாம்பழங்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.
சேலத்தில் மாம்பழம் சீசன் தொடங்கியுள்ளதால் தங்களுக்கு பிடித்தமான மாம்பழங்களை சேலத்தை சேர்ந்த மக்கள் ஆர்வமுடன் வாங்கி வெளியூர்களில் உள்ள தங்களது உறவினர்களுக்கு அனுப்பிவைத்து வருகிறார்கள். இதுதவிர, வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு தற்போது சேலத்தில் இருந்து மொத்தமாக மாம்பழங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் சேலத்தில் மாம்பழ விற்பனை சூடுபிடித்துள்ளது.
விளைச்சல் குறைவு
இது ஒருபுறம் இருக்க, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பருவ நிலை மாற்றம் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால் ஏராளமான மாபிஞ்சுகள் மரத்தில் இருந்து உதிர்ந்துவிட்டன. இதனால் அந்த பகுதியில் மா விளைச்சல் குறைந்ததால் சேலம் மார்க்கெட்டிற்கு மாம்பழங்கள் வரத்தும் பாதியாக குறைந்துவிட்டது. இதன் காரணமாக தற்போது மாம்பழம் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
சேலம் மார்க்கெட்டில் இமாம்பசந்த், மல்கோவா, சேலம் பெங்களூரா ஆகிய மாம்பழங்கள் ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.120 வரையிலும், நடுசாலா, பங்கனப்பள்ளி ஆகிய மாம்பழங்கள் ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.80 வரையிலும், செந்தூரா ரக மாம்பழம் ஒரு கிலோ ரூ.50 வரையிலும், அல்போன்சா ரக மாம்பழம் ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.80 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாம்பழங்களின் விலை கடந்த வாரத்தைவிட 20 சதவீதம் அதிகம் ஆகும்.
விலை உயர்வு
இதுகுறித்து சேலத்தை சேர்ந்த மாம்பழ வியாபாரிகள் கூறுகையில், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருவதால் மா விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சேலம் மார்க்கெட்டிற்கு மாம்பழங்களின் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை 20 சதவீதம் உயர்ந்துள்ளது. மாம்பழ சீசன் தற்போது உச்சத்தை தொட்டுள்ளதால் இன்னும் ஒரு மாதத்திற்கு இதே விலை தான் நீடிக்கும், என்றனர்.
Related Tags :
Next Story