தாரமங்கலம், அமரகுந்தி பகுதிகளில் வீரத்தை பறைசாற்றும் நடுகற்கள் கண்டுபிடிப்பு சேலம் வரலாற்று ஆய்வாளர்கள் தகவல்


தாரமங்கலம், அமரகுந்தி பகுதிகளில் வீரத்தை பறைசாற்றும் நடுகற்கள் கண்டுபிடிப்பு சேலம் வரலாற்று ஆய்வாளர்கள் தகவல்
x
தினத்தந்தி 10 May 2018 4:28 AM IST (Updated: 10 May 2018 4:28 AM IST)
t-max-icont-min-icon

தாரமங்கலம், அமரகுந்தி பகுதிகளில் வீரத்தை பறை சாற்றும் நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

சேலம்,

சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன், மருத்துவர் பொன்னம்பலம், பெருமாள் ஆசிரியர் ஜீவநாராயனன், கவிஞர் மன்னன் ஆகியோர் அடங்கிய குழுவினர் அமரகுந்தி, தாரமங்கலம் பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது அங்கு கிடைத்த கற்களை வரலாற்று ஆவணங்களுடன் சரிபார்த்து அது எந்த வகை கற்களை சேர்ந்தது என கண்டறிந்தனர். இந்த இரு பகுதிகளிலும் சதிகல், புலிகுத்திப்பட்டான்கல் உள்ளிட்ட நடுகற்கள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அது பற்றிய விவரத்தை அவர்கள் கூறியதாவது:

கடந்த 16-ம் நூற்றாண்டில் அமரகுந்தியை தலைநகராக கொண்டு கெட்டிமுதலிகள் ஆட்சி செய்து வந்துள்ளனர். இவர்கள் ஆட்சி காலத்தில் போரில் வீரர்கள் இறந்தவுடன் அவர்கள் மனைவிகள் சிலர் உடன்கட்டை ஏறி உயிரிழந்தனர். அவர்களுக்காக சதிகல் வைக்கப்பட்டது. போரில் உயிரிழந்த ஒரு குதிரைக்கும் வீரனோடு இணைத்து நடுகல் வைக்கப்பட்டுள்ளது.

வீரக்கல்

அமரகுந்தி எல்லம்மாள் கோவில் அருகே ஒரு வீரக்கல் உள்ளது. வீரனின் தலைக்கு மேலே ஒரு சதுரமான கட்டத்தில் சிறிய அளவில் ஒரு பெண் வணங்கிய நிலையில் உள்ளாள். வீரனின் மார்புக்கு அருகே ஈட்டி முனை ஒன்று தெரிகிறது. போரில் இறந்த வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம்.

அமரகுந்தி அருகே சின்னசோரகை, குண்டுதாசன் வலவு என்ற இடத்தில் ஒரு சதிகல் உள்ளது. தாரமங்கலம் ஊருக்குள் சாலை ஓரத்தில் புலிக்குத்திப்பட்டான் நடுகல் காணப்படுகிறது. வலதுபக்க கொண்டை, தோள்வரை தொங்கிய காதுகள்,காதுகளில் துளை,தோள்களில் வாகுவளையம் காணப்படுகிறது. வலது கையால் ஒரு ஈட்டியை பற்றி புலியை குத்தும் நிலையிலும், வலது கையால் தன்னை தாக்கும் புலியை தடுக்கும் நிலையிலும் வீரன் உள்ளான். புலியானது வீரன் மீது மீது பாய்ந்து தாக்கும் நிலையில் உள்ளது. இன்றும் வீரர்களின் வீரத்தை பறை சாற்றும் நடுக்கல்லை அப்பகுதி மக்கள் வியந்து பார்த்து செல்கின்றனர். இது பற்றி அறிந்த சுற்றுலா பயணிகளும் இங்கு வந்து பார்த்து செல்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story