முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பயன்படுத்துவதை போன்ற ஹெலிகாப்டர் வாங்கப்படுகிறது
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பயன்படுத்துவதை போன்ற அதி நவீன ஹெலிகாப்டர் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு வாங்கப்பட உள்ளது.
மும்பை,
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பயன்படுத்துவதை போன்ற அதி நவீன ஹெலிகாப்டர் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு வாங்கப்பட உள்ளது.
அடிக்கடி கோளாறு
மராட்டிய முதல்- மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடந்த ஆண்டு மே மாதம் அரசு விழாவில் கலந்துகொள்ள ஹெலிகாப்டரில் லாத்தூர் சென்றார். அப்போது ஏற்பட்ட விபத்தில் முதல்-மந்திரி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். எனினும் இந்த விபத்தில் அவர் சென்ற ஹெலிகாப்டர் கடும் சேதமடைந்தது.
இதையடுத்து முதல்-மந்திரி தனியார் ஹெலிகாப்டர்களை தான் பயன்படுத்தி வருகிறார். இதில், முதல்-மந்திரி செல்லும் தனியார் ஹெலிகாப்டர்களிலும் அடிக்கடி கோளாறு ஏற்பட்டது.
இந்தநிலையில் முதல்-மந்திரிக்கு ‘சிக்கோர்க்ஸ்கி எஸ் 76 டி’ ரக ஹெலிகாப்டரை வாங்க மாநில தலைமை செயலாளர் தினேஷ் குமார் ஜெயின் தலைமையிலான கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய ஹெலிகாப்டர்
இந்த நவீன ரக ஹெலிகாப்டரில் பல்வேறு வசதிகள் உள்ளன. இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கினாலும் அதன் டயர் வெடிக்காது. மேலும் ஹெலிகாப்டரில் தீப்பிடித்தாலும் அது எரிபொருள் டேங்கை பாதிக்காது. முதல்-மந்திரிக்கு புதிய ஹெலிகாப்டரை தேர்வு செய்த கமிட்டியில் இந்திய விமான ஆணையம், கடற்படை, கடலோர காவல்படை அதிகாரிகளும் இருந்தனர்.
முதல்-மந்திரிக்கு வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள ‘சிக்கோர்க்ஸ்கி எஸ் 76 டி’ ரக ஹெலிகாப்டரை தான் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இங்கிலாந்து ராணி ஆகியோர் தங்களது சொந்த வேலைகளுக்கு பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story