கோவையில் குட்கா ஆலை செயல்பட உதவியதாக தி.மு.க. பிரமுகர் கைது


கோவையில் குட்கா ஆலை செயல்பட உதவியதாக தி.மு.க. பிரமுகர் கைது
x
தினத்தந்தி 10 May 2018 11:15 PM GMT (Updated: 10 May 2018 7:01 PM GMT)

கோவையில் குட்கா ஆலை செயல்பட உதவியதாக தி.மு.க. பிரமுகர் தளபதி முருகேசன் கைது செய்யப்பட்டார். ஆலை முன்பு போராட்டம் நடத்திய வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் இருந்தவரை சென்னையில் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

கோவை,

கோவை அருகே உள்ள சூலூர் கண்ணம்பாளையத்தில் சட்டவிரோதமாக குட்கா தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. அங்கு கடந்த மாதம் 27-ந்தேதி போலீசார் அதிரடி சோதனை நடத்தி ரூ.80 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக குட்கா ஆலை மேலாளர் ரகுராமன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். குட்கா ஆலை உரிமையாளர் அமித் ஜெயின் டெல்லியில் தலைமறைவாக உள்ளார். அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

குட்கா ஆலை மேலாளர் ரகுராமனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் குட்கா ஆலை செயல்பட உதவியதாக தி.மு.க. நெசவாளர் அணி கோவை மாவட்ட அமைப்பாளரும், கண்ணம்பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவருமான தளபதி முருகேசன் நேற்று கைது செய்யப்பட்டார்.

சென்னை முகப்பேர் பகுதியில் தங்கி இருந்த அவரை சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையிலான போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். கைதான தளபதி முருகேசன், ஏற்கனவே கடந்த மாதம் 27-ந்தேதி ஆலை முன்பு போராட்டம் நடத்திய வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தற்போது குட்கா ஆலை செயல்பட உதவியதாக 6-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

சட்ட விரோதமாக குட்கா ஆலை செயல்பட தளபதி முருகேசன் முக்கிய பங்காற்றி உள்ளார். ஆலைக்கான நிலம் வாங்கி கொடுத்ததுடன், சட்ட விரோதமாக குடிநீர் இணைப்பும் அந்த ஆலைக்கு வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் ஆலை செயல்பட லட்சக்கணக்கான ரூபாயை தளபதி முருகேசன் மாமூலாக பெற்று வந்துள்ளதாக மேலாளர் ரகுராமன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். கைதான தளபதி முருகேசன் மீது கூட்டுசதி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தளபதி முருகேசன் கண்ணம்பாளையம் பேரூராட்சி தலைவராக கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பதவி வகித்தார். அப்போது குட்கா தொழிற்சாலைக்கு, வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் கண்ணம்பாளையம் பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்று கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான கோப்புகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தி வருகிறார்கள். குட்கா ஆலை செயல்பட்ட விவகாரத்தில் தி.மு.க. பிரமுகர் கைதான விவகாரம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story