கோவில்பட்டியில் இன்று பிரமாண்ட அரசு விழா ரூ.257 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள்; எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
கோவில்பட்டியில் இன்று நடக்கும் பிரமாண்ட அரசு விழாவில் ரூ.257 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் இன்று நடக்கும் பிரமாண்ட அரசு விழாவில் ரூ.257 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
திட்டப்பணிகள் தொடக்கவிழா
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரசபையில் செய்து முடிக்கப்பட்ட 2-வது குடிநீர் குழாய் திட்டம் தொடக்க விழா, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவில்பட்டி ஆயிர வைசியர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிக்கு நடக்கிறது.
விழாவுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்குகிறார். அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ(கூட்டுறவுதுறை), எஸ்.பி.வேலுமணி (நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கம்), ஆர்.பி.உதயகுமார் (வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை), கே.டி.ராஜேந்திரபாலாஜி (பால்வளம்), எம்.மணிகண்டன் (தகவல் தொழில்நுட்பம்), வி.எம்.ராஜலட்சுமி(ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்), க.பாஸ்கரன் (கதர் மற்றும் கிராமத் தொழில்கள்), டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வரவேற்று பேசுகிறார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
விழாவில் சிறப்பு அழைப்பாளராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, ரூ.81 கோடியே 82 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு உள்ள கோவில்பட்டி 2-வது குடிநீர் குழாய் திட்டம், ரூ.127 கோடியே 24 லட்சம் மதிப்பில் முடிவடைந்த திட்டப்பணிகள், ரூ.47 கோடியே 79 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள 144 கட்டிட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் என மொத்தம் ரூ.256 கோடியே 85 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.
மேலும் 5 ஆயிரத்து 636 பயனாளிகளுக்கு ரூ.16 கோடியே 94 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசுகிறார்.
சிறப்பான வரவேற்பு
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக்கிழமை) விமானம் மூலம் மதுரைக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் கோவில்பட்டிக்கு வருகிறார். அப்போது கயத்தாறை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அறிவித்ததற்கு நன்றி தெரிவித்து கயத்தாறு பகுதி மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து நன்றி தெரிவிக்கின்றனர்.
மதியம் 12.30 மணிக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இல்லத்துக்கு செல்கிறார். அங்கு மதிய உணவு அருந்துகிறார். மாலை 3 மணிக்கு ஆயிர வைசியர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார்.
பலத்த பாதுகாப்பு
முதல்-அமைச்சர் வருகையையொட்டி தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் ஆகியோர் மேற்பார்வையில், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதில் 3 போலீஸ் சூப்பிரண்டுகள், 5 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 20 இன்ஸ்பெக்டர்கள், 50 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட மொத்தம் 1200 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும் முதல்-அமைச்சர் வருகையால் கோவில்பட்டி நகரம் முழுவதும் தோரணங்களும், கட்சி கொடிகளும், அலங்கார வரவேற்பு வளைவுகளும் அமைக்கப்பட்டு உள்ளன. நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு உள்ளது.
அமைச்சர் ஆய்வு
விழா ஏற்பாடுகளை செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோர் நேற்று காலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி அளவில் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வருகிறார். பின்னர் காரில் கோவில்பட்டிக்கு வரும் முதல்-அமைச்சருக்கு நகர எல்லையான தோட்டிலோவன்பட்டி விலக்கில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
கனவு திட்டம்
பின்னர் கடம்பூர் அம்பிகை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் கடம்பூர் சிதம்பராபுரத்தில் உள்ள எனது (அமைச்சர் கடம்பூர் ராஜூ) வீட்டில் முதல்-அமைச்சர் மதிய உணவு சாப்பிடுகிறார். பின்னர் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி விடுதியில் சிறிதுநேரம் ஓய்வு எடுத்து விட்டு, மாலையில் விழாவில் பங்கேற்கிறார்.
கோவில்பட்டி நகர மக்களின் 40 ஆண்டுகால கனவு திட்டமான 2-வது குடிநீர் குழாய் திட்டத்தை முதல்-அமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார். எனவே, இதில் கோவில்பட்டி சுற்று வட்டார பகுதி மக்கள் அனைவரும் கட்சி பாகுபாடின்றி திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
Related Tags :
Next Story