வளமான புதுச்சேரியை உருவாக்க என்னுடன் இணைந்து செயல்படுங்கள் நாராயணசாமிக்கு, கிரண்பெடி அழைப்பு


வளமான புதுச்சேரியை உருவாக்க என்னுடன் இணைந்து செயல்படுங்கள் நாராயணசாமிக்கு, கிரண்பெடி அழைப்பு
x
தினத்தந்தி 10 May 2018 11:00 PM GMT (Updated: 10 May 2018 7:37 PM GMT)

வளமான புதுச்சேரியை உருவாக்க என்னுடன் இணைந்து செயல் படுங்கள் என்று நாராயணசாமிக்கு கிரண்பெடி அழைப்பு விடுத்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பெடியின் உத்தரவுகளை 3 முறை நிராகரித்துள்ள நிலையில் மத்திய அரசின் நம்பிக்கையை இழந்த அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி வற்புறுத்தினார். இதற்கு முன்மாதிரியான சம்பவங்கள் பல மாநிலங்களில் நடந்துள்ளதாகவும், சமீபத்தில் டெல்லியில் நடந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

முதல்-அமைச்சரின் இந்த கருத்துக்கு பதில் தெரிவித்து சமூக வலைதளத்தில் கவர்னர் கிரண்பெடி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் என்னை ராஜினாமா செய்ய கேட்டுள்ளார். நான் கடந்த 2 வருடங் களாக கவர்னர் மாளிகை அதிகாரிகளுடன் கிராமப்புற பகுதிகளில் ஆய்வு நடத்தி அவர்களின் தேவைகளை கேட்டறிந்து வருகிறேன். கழிவுநீர் வாய்க்கால்கள், படுகை அணைகள், தூர்வாரப்படுகின்றன. குப்பைகளும் அகற்றப்பட்டு வருகின்றன. காணாமல் போன நீர்நிலைகள் பல அடையாளம் காணப்பட்டுள்ளன.

பொதுமக்களின் வரிப்பணம் சுரண்டப்படாமல், மடைமாற்றம் செய்யப்படாமல் அவர்களுக்காக செலவிடப்படுகிறது. நாள்தோறும் கவர்னர் மாளிகையில் மக்கள் குறை கேட்கப்படுகிறது. மருத்துவ மாணவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுகிறது.

புதுவை மக்களுக்கு இன்னும் நிறைய தேவைப்படுகிறது. எனவே என்னுடன் இணைந்து செயல்படுங்கள். வளமான புதுச்சேரியை உருவாக்குவோம்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார். 

Next Story