2 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் மின்னணு தொழிற்பூங்கா அமைக்கப்படும் நாராயணசாமி பேச்சு


2 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் மின்னணு தொழிற்பூங்கா அமைக்கப்படும் நாராயணசாமி பேச்சு
x
தினத்தந்தி 10 May 2018 11:00 PM GMT (Updated: 10 May 2018 7:52 PM GMT)

2 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திடும் வகையில் புதுச்சேரியில் மின்னணு தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

பாகூர்,

புதுச்சேரி தொழிலாளர் துறை, புதுச்சேரி திறன் மேம்பாட்டு பயிற்சி இயக்கம் ஆகியவை சார்பில், கிராமப்பற பள்ளி கல்லுாரி மாணவர்கள் பயன் பெறும் வகையில் திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பயிற்சி திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி தவளக்குப்பத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தொழிலாளர் துறை ஆணையர் வல்லவன் வரவேற்றார். கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி, அரசு கொறடா அனந்தராமன் ஆகியோர் பயிற்சியை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பெடி பேசியதாவது:-

திறன் மேம்பாட்டு திட்டம் என்பது மத்திய அரசு நிதி வழங்கும் திட்டமாகும். இது மத்திய அரசுக்கு மட்டுமின்றி மாநில அரசுக்கும் வெற்றியை கொடுக்கும் நிகழ்வாக அமையும்.

இந்த பயிற்சிக்குப் பின், வங்கிகள் மூலமாக முத்ரா திட்டத்தில் குறைந்த வட்டியில் கடன் பெற முடியும். குழுவாக சேர்ந்து பயிற்சி பெற்றால் நபார்டு வங்கியின் மூலம் அதிக கடன் கிடைக்கும். இதன் மூலம் தொழில் தொடங்கி, வங்கி கடனை திருப்பி செலுத்தலாம். அதேநேரத்தில் பிறருக்கு வேலை வழங்க முடியும்.

இதில் பயிற்சி பெறுபவர்கள் பிரதம மந்திரி திறன் மேம்பாட்டு திட்டத்தில் புதுச்சேரிக்கென பிரேத்யேக இடத்தை உருவாக்கிட வேண்டும். பயிற்சி பெறும் இளைஞர்கள் தொழில் முனைவோராக உயர்ந்து பிறருக்கு வேலை கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:-

மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது 60 கோடி பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் திட்டத்தை கொண்டு வந்தார். அதன்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பிரதமராக பொறுப்பேற்ற மோடி, இதற்காக ஒரு அமைச்சகத்தை உருவாக்கி, பயிற்சி அளிக்கப்படுகிறது.

நான் (நாராயணசாமி) எம்.பி.யாக இருந்த போது, புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் சார்பில், வில்லியனூர், பாகூர், திருக்கனூரில் எம்.பி., மேம்பாட்டு நிதியின் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிருக்கு கணினி பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்களில் பலர் தனியார் தொழிற்சாலைகளில் வேலைக்கு சேர்ந்தனர்.

தற்போது 32 ஆயிரம் பேருக்கு கோடை விடுமுறை திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு தொழிற் பயிற்சி மையங்கள், மற்றும் தனியார் பள்ளிகளில் தொழிற் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

பெண்களுக்கு வாகனம் ஓட்டும் பயிற்சி கொடுத்தால், அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுப்பதில் எங்களது அரசு தயாராக உள்ளது. இதன் மூலம் ஆணுக்கு பெண் சமம் என்பதை நிரூபிக்க முடியும். பெண்கள் எந்த திறமைகளிலும் சளைத்தவர்கள் அல்ல.

புதுச்சேரி மாநிலத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர். விருந்தினர் உபசரிப்பு, வழிகாட்டி போன்ற பயிற்சிகள் அளித்தால், புதுச்சேரியில் மட்டுமில்லாமல் இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் வேலை செய்யலாம். நேர்முக தேர்வில் பங்கேற்பது குறித்து 8 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், புதுச்சேரியை சேர்ந்த 1700 பேருக்கு சென்னை, பெங்களூரு மற்றும் வெளி மாநிலங்களில் வேலை கிடைத்துள்ளது.

புதுச்சேரியில் மின்னணு தொழிற்பூங்கா அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 2 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கிட முடியும். எனவே கோடை கால பயிற்சியை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சுயமாக தொழில் செய்வோருக்கு வங்கி கடன் பெற்று தருவதற்கான நடவடிக்கையை எடுப்போம்.

இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:-

இந்தியாவில் முதன் முறையாக புதுச்சேரியில்தான் திறன் மேம்பாட்டு பயிற்சி ஆரம்பிக்கப்படுகிறது. இதற்கான பெருமை, கவர்னர் மற்றும் முதல்வரையே சேரும். இந்த ஆண்டு 50 ஆயிரம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி கொடுக்கப்படும்.

2018-19 ஆண்டுக்கான நிதிக்குழு கூட்டத்தில், 7 ஆயிரத்து 530 கோடி ரூபாய்க்கு திட்டம் திட்டப்பட்டது. இதற்கு முன் இருந்த அரசு வாங்கிய கடனுக்காக 1,530 கோடி ரூபாய் செலுத்த வேண்டி உள்ளது. 75 சதவீத நிதி அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. மீதி இருக்கும் 500 கோடி ரூபாயை வைத்து நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டியது உள்ளது.

இதற்கு, கடந்த அரசாங்கம் செய்வது தவறுகளே காரணம். இதனை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். கிடப்பில் உள்ள திட்டங்களை செயல்படுத்திட, கவர்னரும், முதல்வரும் இணைந்து மத்திய அரசிடமிருந்து 500 கோடி ரூபாய் கடன் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், தொழிலாளர் துறை துணை ஆணையர் முத்துலிங்கம், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Next Story