சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் கருடசேவை
சித்திரை திருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் கருடசேவை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவைகுண்டம்,
சித்திரை திருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் கருடசேவை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சித்திரை திருவிழா
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதி கோவில்களில் முதலாவது தலமும், சூரியன் தலமுமான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலையில் சுவாமி தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடு, தங்கமசகிரியில் வைத்து திருமஞ்சனம், தீர்த்த வினியோக கோஷ்டி நடக்கிறது.
தினமும் மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். ஒவ்வொரு திருநாளும் ஒவ்வொரு மண்டகபடிதாரர் சார்பில் விழா கொண்டாடப்படுகிறது.
கருடசேவை
5-ம் திருநாளான நேற்று முன்தினம் காலையில் சுவாமி கள்ளபிரான், பொலிந்துநின்றபிரான், காய்சினவேந்தபெருமாள், விஜயாசனபெருமாளுக்கு சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
இரவில் குடவரை பெருவாயில் ஹம்ச வாகனத்தில் நம்மாழ்வாருக்கு எதிர்சேவையாக 4 கருட வாகனங்களில் சுவாமி கள்ளபிரான், பொலிந்துநின்றபிரான், காய்சினவேந்தபெருமாள், விஜயாசனபெருமாள் எழுந்தருளி கருடசேவை நடந்தது. ஒரே நேரத்தில் 5 சுவாமிகளும் எழுந்தருளியதை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
13-ந்தேதி, தேரோட்டம்
9-ம் திருநாளான வருகிற 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 10-ம் திருநாளான 14-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு சோரநாதர் எழுந்தருளி தீர்த்தவாரி, காலை 11 மணிக்கு தீர்த்த வினியோக கோஷ்டி, இரவு 9 மணிக்கு வெட்டிவேர் சப்பரத்தில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் விசுவநாத், கோவில் ஆய்வாளர் ரவீந்திரன், தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாசன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story