ஆலங்குளம் அருகே நூற்பாலையில் பயங்கர தீ விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சுகள் எரிந்து நாசம்


ஆலங்குளம் அருகே நூற்பாலையில் பயங்கர தீ விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சுகள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 10 May 2018 9:45 PM GMT (Updated: 10 May 2018 8:25 PM GMT)

ஆலங்குளம் அருகே நூற்பாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சுகள் எரிந்து நாசம் ஆனது.

ஆலங்குளம், 

ஆலங்குளம் அருகே நூற்பாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சுகள் எரிந்து நாசம் ஆனது.

நூற்பாலையில் தீ

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கீழ கரும்புளியூத்து கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலை ஒன்று அமைந்து உள்ளது. இந்த நூற்பாலையில் 500-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இங்கு நூல் தயாரிப்பதற்கு தேவையான பருத்தி பஞ்சுகள் அருகில் உள்ள குடோன்களில் சேகரித்து வைக்கப்பட்டு உள்ளன.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் நூற்பாலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். நள்ளிரவு 1 மணியளவில் காவலாளி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது பஞ்சு சேகரித்து வைக்கப்பட்டு இருந்த ஒரு குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது.

தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்

இதனால் மின்கசிவு ஏற்பட்டு இருக்கும் என்று கருதி அவர் எலக்ட்ரீசியன் மாரிமுத்துவுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். உடனே மாரிமுத்து அங்கு வந்து பார்த்தபோது, பஞ்சுகளில் தீ மளமளவென பிடித்து எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக ஆலை துணை பொது மேலாளர் திருமலைகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து மாவட்ட தீயணைப்பு அதிகாரி மகாலிங்கம், துணை தீயணைப்பு அதிகாரி கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில், பாளையங்கோட்டை, ஆலங்குளம், பேட்டை, சுரண்டை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

பஞ்சுகள் எரிந்து நாசம்

அவர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 13 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இருப்பினும், இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சுகள் எரிந்து நாசம் ஆனது. இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்து எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story