மாவட்ட செய்திகள்

கடைசி நாளில் தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டைகர்நாடக சட்டசபைக்கானதேர்தல் பிரசாரம் ஓய்ந்தது + "||" + For Karnataka Legislative Assembly The election campaign ended

கடைசி நாளில் தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டைகர்நாடக சட்டசபைக்கானதேர்தல் பிரசாரம் ஓய்ந்தது

கடைசி நாளில் தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டைகர்நாடக சட்டசபைக்கானதேர்தல் பிரசாரம் ஓய்ந்தது
கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. கடைசி நாளில் தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். நாளை (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது.
பெங்களூரு, 

கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. கடைசி நாளில் தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். நாளை (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது.

கர்நாடக சட்டசபைக்கு கடந்த 1952-ம் ஆண்டு முதல் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

கர்நாடக சட்டசபை தேர்தல்

224 தொகுதிகளை உள்ளடக்கியது, கர்நாடக சட்டசபை. ஒரு நியமன உறுப்பினர் உள்பட மொத்தம் 225 உறுப்பினர்கள் சட்டசபையில் உள்ளனர். தற்போது கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியின் பதவிக்காலம் வருகிற 28-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் கர்நாடக சட்டசபைக்கு மே 12-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த மார்ச் 27-ந்தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இது 15-வது கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் ஆகும். கடந்த ஏப்ரல் மாதம் 17-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடந்தது. 25-ந்தேதி மனுக்கள் மீதான பரிசீலனையும், 27-ந்தேதி மனுக்கள் வாபஸ் பெறும் பணியும் நடந்தது.

இறுதியாக வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி 223 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. அதேப் போல் அக்கட்சி மண்டியா மாவட்டம் மேல்கோட்டை தொகுதியில், மறைந்த விவசாய சங்கத் தலைவர் புட்டண்ணய்யாவின் மகன் தர்ஷன் புட்டண்ணய்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால் முல்பாகல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கொத்தூர் மஞ்சுநாத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அக்கட்சி தற்போது 222 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

2,636 வேட்பாளர்கள் போட்டி

பா.ஜனதா கட்சி 224 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. ஜனதாதளம் (எஸ்) கட்சியும், அதன் கூட்டணி கட்சியான பகுஜன்சமாஜ் கட்சியும் மொத்தம் 219 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. மேலும் ஆம் ஆத்மி கட்சி, அ.தி.மு.க., கம்யூனிஸ்டுகள் உள்பட ஏராளமான கட்சிகளும், சுயேச்சைகளும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இதற்கிடையே ஜெயநகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளரான விஜயகுமார் எம்.எல்.ஏ. மாரடைப்பால் மரணமடைந்ததால், அந்த தொகுதியில் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி 223 தொகுதிகளில் மொத்தம் 2,636 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகுவதற்கு முன்பே ஆளும் காங்கிரசும், எதிர்க்கட்சிகளான பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் பிரசாரத்தை தொடங்கிவிட்டன என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில், இந்தியாவில் நீண்ட காலம் ஆட்சி செய்த கட்சி என்ற பெருமைக்குரிய காங்கிரஸ் 22 மாநில சட்டசபை தேர்தல்களில் தோல்வி அடைந்து, ஆட்சியை இழந்துவிட்டது. தற்போது மிசோரம், பஞ்சாப், புதுச்சேரி, கர்நாடகம் ஆகிய 4 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. இதனால் கர்நாடகத்தில் ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் பெரும் முயற்சியை கையாண்டுள்ளது. பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி ஆட்சி 22 மாநிலங்களில் நடந்து வருகின்றன. தென்இந்தியாவில் காலூன்ற வேண்டும் என்ற நோக்கில் பா.ஜனதா கர்நாடகத்தில் வெற்றிக்கொடி நாட்ட முயற்சி செய்து வருகிறது. இதற்கிடையே மாநில கட்சியான ஜனதாதளம் (எஸ்) கட்சியும் ஆட்சி பீடத்தில் அமர கோதாவில் குதித்துள்ளது.

மும்முனை போட்டி

இதனால் கர்நாடக சட்டசபை தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளன. இதன் காரணமாக கர்நாடகத்தில் 40 ஆண்டுக்கு பிறகு ஆளுங்கட்சியே மீண்டும் அரியணையில் ஏறுமா? அல்லது காங்கிரசிடம் இருந்து ஆட்சியை பறித்து பா.ஜனதா தென்மாநிலத்தில் காலூன்றுமா? அல்லது ஜனதாதளம் (எஸ்) கட்சி ஆட்சி அமைக்குமா? என்ற முக்கோண கேள்விகள் கர்நாடக வாக்காளர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

தேர்தலில் வெற்றி பெற பல்வேறு வியூகங்களை வகுத்த காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) ஆகிய 3 கட்சிகளுமே மாநிலம் முழுவதும் யாத்திரைகளை மேற்கொண்டன. அதன் பின்னர் பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்ட பிரதமர் மோடி, அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, முதல்-மந்திரி வேட்பாளர் எடியூரப்பா, மத்திய மந்திரிகள், பிற மாநில முதல்-மந்திரிகள் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர். அதேப் போல் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய மந்திரிகள், முன்னாள் முதல்-மந்திரிகள், முதல்-மந்திரி வேட்பாளர் சித்தராமையா, நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் நட்சத்திர பேச்சாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

பிரதமர் மோடி பிரசாரம்

பா.ஜனதா சார்பில் நட்சத்திர பேச்சாளரான பிரதமர் நரேந்திரமோடி, கடந்த 1-ந் தேதி கர்நாடகம்-தமிழகம் எல்லையில் அமைந்துள்ள சாம்ராஜ்நகரில் பிரசாரத்தை தொடங்கினார். அவர் நேற்று முன்தினம் இரவு கர்நாடகம்-தெலுங்கானா எல்லையில் அமைந்துள்ள பீதரில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.

6 நாட்கள் சுற்றுப்பயணத்தில் பிரதமர் மோடி, 21 இடங்களில் நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டார். ஒரு நாளைக்கு 3 முதல் 4 கூட்டங்கள் வரை பங்கேற்று ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார். பிரதமரின் பிரசாரம் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது பிரசாரத்தின்போது, காங்கிரஸ் கட்சி, முதல்-மந்திரி சித்தராமையா, ராகுல் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன்சிங் ஆகியோரை கடுமையாக விமர்சித்து பேசினார். இறுதியாக ராகுல் காந்தியின் பிரதமர் பதவி பற்றிய பேச்சுக்கு பதிலளித்த மோடியின் கருத்து, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ராகுல் காந்தி குற்றச்சாட்டு

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுமார் 10 கட்ட பிரசார சுற்றுப்பயணத்தை கர்நாடகத்தில் மேற்கொண்டார். அவர், காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகள், மோடி ஆட்சியின் தோல்விகளை குறிப்பிட்டு ஆதரவு திரட்டினார். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், மோடி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று அவர் கடுமையாக சாடினார். அவருடைய பிரசாரத்தில் மத்திய அரசின் மீதான விமர்சனத்தை முன்வைத்தார்.

பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று ராகுல் காந்தி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதை முடித்துக்கொண்டு அவர் தனி விமானம் மூலம் உப்பள்ளிக்கு சென்றார். பின்னர் அவர் தேர்தல் பிரசாரத்தின் போது மாட்டுவண்டியில் இருந்து தவறி விழுந்து இறந்த நவலகுந்து அருகே அள்ளிகேரியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் எச்.வி.மாடள்ளி என்பவரின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதன் பின்னர் அவர் டெல்லி புறப்பட்டு சென்றார்.

தீவிர ஓட்டு வேட்டை

முதல்-மந்திரி சித்தராமையா மைசூரு மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதியில் கிராமம் கிராமமாக சென்று வாக்குகளை சேகரித்தார். அவர் இறுதிநாளான நேற்று மொத்தம் 13 இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். சாமுண்டீஸ்வரி தொகுதியில் நேற்று மாலையில் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை முடித்துக்கொண்டார். பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை பாதாமியில் மேற்கொண்டார். அங்கு அவர் திறந்த வாகனத்தில் சாலையில் வந்தபடி ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.

நேற்று ஒரே நாளில் மட்டும் 39 இடங்களில் பிரசாரம் செய்த அமித்ஷா தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தார். எடியூரப்பாவும் அதே பாதாமி தொகுதியில் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தார். ஜனதா தளம்(எஸ்) கட்சி மாநில தலைவர் குமாரசாமி பெங்களூருவில் தனது கடைசி நாள் பிரசாரத்தை முடித்தார். வேட்பாளர்கள் வீடு-வீடாக சென்று ஓட்டு சேகரிக்கிறார்கள்.

பிரசாரம் ஓய்ந்தது

இந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கான பகிரங்க பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து தெருக்களில், சாலைகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வாகனங்களில் ஒலித்து வந்த ஒலிபெருக்கிகளின் சத்தம் அடங்கி நிசப்தமானது. தொகுதிகளில் முகாமிட்டு இருந்த வெளியூர் பிரமுகர்கள் உடனடியாக தொகுதிகளைவிட்டு வெளியேறினர்.

நாளை ஓட்டுப்பதிவு

பகிரங்க பிரசாரம் ஓய்ந்ததை அடுத்து நாளை(சனிக்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடி அமைந்துள்ள 100 மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை