கனிம சுரங்க முறைகேடு வழக்கில் சாதகமாக தீர்ப்பு வழங்க நீதிபதியின் மருமகனுடன் ஸ்ரீராமுலு பேரம்


கனிம சுரங்க முறைகேடு வழக்கில் சாதகமாக தீர்ப்பு வழங்க நீதிபதியின் மருமகனுடன் ஸ்ரீராமுலு பேரம்
x
தினத்தந்தி 11 May 2018 3:30 AM IST (Updated: 11 May 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

கனிம சுரங்க முறைகேடு வழக்கில் சாதகமாக தீர்ப்பு வழங்க நீதிபதியின் மருமகனுடன் ஸ்ரீராமுலு பேரம் பேசும் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

பெங்களூரு, 

கனிம சுரங்க முறைகேடு வழக்கில் சாதகமாக தீர்ப்பு வழங்க நீதிபதியின் மருமகனுடன் ஸ்ரீராமுலு பேரம் பேசும் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

கர்நாடக போலீஸ் மந்திரி ராமலிங்கரெட்டி, காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் பெங்களூருவில் நேற்று கனிம சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் சாதகமாக தீர்ப்பு வழங்க நீதிபதி ஒருவரின் மருமகனுடன் ஸ்ரீராமுலு பேரம் பேசும் வீடியோவை வெளியிட்டனர். பின்னர் அவர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தைரியத்தை பாராட்ட வேண்டும்

எங்கள் காங்கிரஸ் அரசு மீது பா.ஜனதாவினர் ஊழல் புகார்களை கூறுகிறார்கள். ஊழல் வழக்கில் சிறை சென்றவர்களை அருகில் உட்கார வைத்துக்கொண்டு அவர்கள் இவ்வாறு குற்றம்சாட்டுகிறார்கள். மோடி, அமித்ஷா ஆகியோரின் தைரியத்தை பாராட்டி தான் ஆக வேண்டும். பா.ஜனதா கட்சி தேர்தல் பொறுப்பை ரெட்டி சகோதரர்களுக்கு வழங்கியுள்ளது. அடுத்து வரும் காலத்தில் பா.ஜனதா ஊழல் குழுவை அமைக்கும்.

எங்கள் கட்சி தலைவர்கள் மற்றும் மந்திரிகள் மீது ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டை மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் சுமத்துகிறார்கள். வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை கொண்டு வருவதாக மோடி கூறினார். ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதுபற்றி மோடி பேசுவது இல்லை.

பேரம் பேசுவது

கனிம சுரங்க முறைகேடுகள் தொடர்பாக நாங்கள் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளோம். அதில் இதுதொடர்பான வழக்கில் சாதகமாக தீர்ப்பு வழங்க சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணனின் மருமகன் ஸ்ரீநிதனுடன் பா.ஜனதாவை சேர்ந்த ஸ்ரீராமுலு மற்றும் ஜனார்த்தனரெட்டியின் நண்பர்கள் பேரம் பேசுவது இடம் பெற்றுள்ளது.

ரூ.150 கோடி லஞ்சம் கொடுப்பது பற்றி பேரம் பேசப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின்போது ரூ.100 கோடி கிடைத்துள்ளது, இன்னும் ரூ.50 கோடி வர வேண்டும் என்று அதில் தரகரான ஸ்ரீநிதன் சொல்கிறார். எனது மாமனார் ஓய்வு பெற்றாலும், தீர்ப்பை மாற்ற முடியும் என்றும் அவர் கூறுகிறார். இந்த வீடியோ காட்சியை பார்க்கும்போது நீதித்துறை மீதான நம்பிக்கை தகர்ந்துவிட்டதை காட்டுகிறது.

ரூ.150 கோடி லஞ்சம்

கனிம சுரங்க முறைகேடு வழக்கில் ஆந்திரா ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்யுமாறு இந்த லஞ்ச பேரம் நடந்துள்ளது வீடியோ மூலம் பகிரங்கமாகியுள்ளது. ரெட்டி சகோதரர்கள் ரூ.150 கோடி லஞ்சம் கொடுத்துள்ளனர். இப்படிப்பட்ட ஊழல்வாதிகளுக்கு தான் பா.ஜனதா டிக்கெட் கொடுத்துள்ளது. இத்தகையவர்கள் எங்களை ஊழல்வாதிகள் என்று சொல்வது நியாயம்தானா?.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story