பாகல்கோட்டையில் ஜீப் மீது லாரி மோதி விபத்து துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 3 போலீசார் சாவு
பாகல்கோட்டையில் ஜீப் மீது லாரி மோதிய விபத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 3 போலீசார் பலியானார்கள்.
பாகல்கோட்டை,
பாகல்கோட்டையில் ஜீப் மீது லாரி மோதிய விபத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 3 போலீசார் பலியானார்கள். தேர்தல் பாதுகாப்பு பணிக்கு சென்ற போது இந்த பரிதாபம் நடந்துள்ளது.
தேர்தல் பாதுகாப்பு பணிக்கு சென்றனர்
ராமநகர் மாவட்டம் கனகபுராவை சேர்ந்தவர் பாலேகவுடா (வயது 55). இவர், பெங்களூருவில் சி.ஐ.டி. போலீஸ் பிரிவில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தார். அதுபோல, சி.ஐ.டி.யில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் சிவசாமி (54). இவர்கள் 2 பேரும் பாகல்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் இருந்து ஜீப்பில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலேகவுடா, இன்ஸ்பெக்டர் சிவசாமி, போலீஸ்காரர் வேணுகோபால் (35) ஆகியோர் பாகல்கோட்டைக்கு புறப்பட்டு சென்றனர். ஜீப்பை வேணுகோபால் ஓட்டினார்.
நேற்று அதிகாலை பாகல்கோட்டை புறநகர் கூடலசங்கமா கிராசில் ஜீப் சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் வந்த ஒரு லாரி திடீரென்று ஜீப் மீது மோதியது. இதனால் ஜீப் அப்பளம் போல நொறுங்கியது. இந்த கோர விபத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலேகவுடா, இன்ஸ்பெக்டர் சிவசாமி, போலீஸ்காரர் வேணுகோபால் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்கள். இதுபற்றி அறிந்ததும் பாகல்கோட்டை புறநகர் போலீசார் விரைந்து வந்து, 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பெரும் சோகம்
முன்னதாக விபத்து நடந்த பகுதியை பாகல்கோட்டை போலீஸ் சூப்பிரண்டு வம்சி கிருஷ்ணா பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்போது லாரியை டிரைவர் அதிவேகமாக ஓட்டியதே விபத்திற்கு காரணம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து பாகல்கோட்டை புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லாரி டிரைவரை தேடிவருகின்றனர். தேர்தல் பாதுகாப்பு பணிக்கு சென்ற 3 போலீசார் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story