மாவட்ட செய்திகள்

கணவருடன் நடைபயிற்சியில் ஈடுபட்ட பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு + "||" + The golden chain with a woman walking with her husband

கணவருடன் நடைபயிற்சியில் ஈடுபட்ட பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு

கணவருடன் நடைபயிற்சியில் ஈடுபட்ட பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு
திருச்சியில் வழிப்பறி சம்பவம் தொடர்கதையாகி விட்டது. கணவருடன் நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் தங்கச்சங்கிலியை மர்ம ஆசாமிகள் பறித்து சென்றனர்.
திருச்சி,

திருச்சி மாநகரில் தினமும் வழிப்பறி சம்பவம் நடந்த வண்ணம் உள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு கண்டோன்மெண்ட் அய்யப்பன் கோவில் முன்பு எண்ணெய் விளக்கு விற்பனை செய்யும் 76 வயது மூதாட்டியிடம், 3 மர்ம ஆசாமிகள் போலீஸ் எனக்கூறி கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலி, கையில் கிடந்த 4 பவுன் வளையல்கள் என 9 பவுன் நகையை அபேஸ் செய்தனர்.


மேலும் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து பெண்களின் கழுத்தில் கிடக்கும் தாலிச்சங்கிலி உள்பட நகைகளை வழிப்பறி செய்வது, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபடுவது என திருட்டும், வழிப்பறியும் தொடர்கதையாகி விட்டது. மாநகரில் போலீசார் முறையான ரோந்து பணியில் ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டை பொதுமக்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் திருச்சியில் கணவருடன் நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் தங்கச்சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த 2 ஆசாமிகள் பறித்து சென்றனர்.

திருச்சி தில்லைநகர் 3-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் சீதாராமன்(வயது68). இவரது மனைவி விசாலாட்சி(60). கணவன், மனைவி இருவரும் தினமும் தில்லைநகர் பகுதியில் காலை வேளையில் நடைபயிற்சியில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு இருவரும் திருச்சி கோட்டை ரெயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள பாலத்தில் பேசியபடியே நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் இருவரையும் பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் 2 பேர், மின்னல் வேகத்தில் விசாலாட்சி கழுத்தில் கிடந்த 3½ பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினர். உடன் வந்த கணவர் சீதாராமன் திருடன்...திருடன் என சத்தம் போட்டும் எந்த பலனும் இல்லை. அந்த வழியே சென்ற யாரும் தப்பி ஓடியவர்களை விரட்டி செல்லவில்லை. மேலும் வயது முதிர்வு காரணமாக சீதாராமனால் விரட்டி செல்லவும் முடியாமல் போனது. பறிபோன நகையின் மதிப்பு ரூ.70 ஆயிரம் ஆகும். புகாரின் பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.