கோலார் மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது கலெக்டர் பேட்டி
கோலார் மாவட்டத்தில், தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கலெக்டர் சத்தியவதி கூறினார்.
கோலார் தங்கவயல்,
கோலார் மாவட்டத்தில், தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கலெக்டர் சத்தியவதி கூறினார்.
தயார் நிலையில் உள்ளது
கோலார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சத்தியவதி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோலார் மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 1,588 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் 12 வாக்குச்சாவடிகள் “பிங்க்“ வாக்குச்சாவடிகள் ஆகும். தேர்தலுக்காக மாவட்டத்தில் 10,041 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களை அழைத்து வர வசதியாக 277 அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
144 தடை உத்தரவு
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கோலார் மாவட்டத்தில் 444 வழக்குகள் பதிவாகி உள்ளது. இன்று(அதாவது நேற்று) மதியம் வரை 28 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ரூ.96 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டு உள்ளது. தேர்தலை அமைதியான முறையில் நடத்த அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
தேர்தலையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக இன்று(அதாவது நேற்று) மாலை 6 மணி முதல் 12-ந் தேதி(நாளை) மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கூட்டமாக செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் இன்று(நேற்று) மாலை 6 மணி முதல் 13-ந் தேதி காலை 6 மணி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக்கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
உத்தரவை மீறி மதுக்கடைகளை திறந்து வைக்கும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கடைகளின் உரிமமும் ரத்து செய்யப்படும். சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்பவர்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது உதவி கலெக்டர் வித்யாகுமாரி, கோலார் போலீஸ் சூப்பிரண்டு ரோகிணி கடோச், கோலார் தங்கவயல் போலீஸ் சூப்பிரண்டு லோகேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
தீவிர சோதனை
இதனை தொடர்ந்து கோலார் தங்கவயல் போலீஸ் சூப்பிரண்டு லோகேஷ்குமார் தனது அலுவலகத்தில் வைத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தேர்தலையொட்டி கோலார் தங்கவயலில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 235 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட கூடாது என்று ரவுடிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதையும் மீறினால் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆந்திரா, தமிழ்நாட்டில் இருந்து வரும் வாகனங்கள் எல்லையில் தீவிர சோதனைக்கு பிறகே கோலார் தங்கவயலுக்குள் செல்ல அனுமதிக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story