ஜாமீனில் விடுதலை: சகன் புஜ்பால் 2 ஆண்டுகளுக்கு பிறகு வீடு திரும்பினார்
ஜாமீனில் விடுதலையான சகன் புஜ்பால் 2 ஆண்டுகளுக்கு பின் வீடு திரும்பினார்.
மும்பை,
ஜாமீனில் விடுதலையான சகன் புஜ்பால் 2 ஆண்டுகளுக்கு பின் வீடு திரும்பினார்.
சகன் புஜ்பால்
மராட்டிய முன்னாள் துணை முதல்-மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான 70 வயது சகன் புஜ்பால், மாநில பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்தபோது தனது பதவியை பயன்படுத்தி சட்டவிரோதமாக ஆதாயம் அடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் இவர் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் சகன் புஜ்பாலின் உடல்நிலை மற்றும் வயதை கருத்தில் கொண்டு மும்பை ஐகோர்ட்டு கடந்த 4-ந் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
உடல் நல பாதிப்பு காரணமாக சகன் புஜ்பால் மும்பை கே.இ.எம். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
டிஸ்சார்ஜ்
சிகிச்சையில் அவர் உடல் நலம் தேறினார். இதையடுத்து டாக்டர்கள் அவரை டிஸ்சார்ஜ் செய்ய முடிவு செய்தனர். இதன்படி சகன் புஜ்பால் நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்த சகன் புஜ்பால் உற்சாகத்துடன் காணப்பட்டார். அவரது ஆதரவாளர்கள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து அவர் காரில் மும்பை சாந்தாகுருசில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். 2 ஆண்டுகளுக்கு பிறகு வீடு திரும்பிய சகன் புஜ்பாலை கண்ணீர் மல்க உணர்ச்சிபூர்வமாக குடும்பத்தினர் வரவேற்றனர். குடும்பத்தினருடன் சகன் புஜ்பால் அளவளாவினார்.
முழுமையாக குணமடையவில்லை
முன்னதாக வீட்டின் முன் நிருபர்களுக்கு சகன் புஜ்பால் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிவசேனா எனக்கு ஆதரவாக பேசியதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் சிவசேனாவில் 25 ஆண்டுகள் இருந்து உள்ளேன். எனவே அவர்களுக்கு என் மீது பரிவும், அக்கறையும் நிச்சயம் இருக்கும். கடந்த 3½ மாதங்களாக எனது உடல்நிலை சரியில்லை. இன்னும் நான் முழுமையாக குணமடையவில்லை. டாக்டர்கள் எந்த கடினமான வேலையும் செய்யவேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர். அறுவை சிகிச்சை மேற்கொள்ள மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவேன்.
சரத்பவார் விசாரித்தார்
நான் ஜாமீனில் வெளியே வந்தவுடன் சரத்பவார் போன் செய்து விசாரித்தார். நல்ல உடல் நலத்துடன் இருந்தால் புனேயில் ஜூன் 10-ந் தேதி நடைபெறும் தேசியவாத காங்கிரஸ் பொது கூட்டத்தில் கலந்து கொள்வேன். ஒருமுறை பா.ஜனதா எம்.பி. ஒருவர் டெல்லி சதன் கட்டிடம் அழகாக இருப்பதாக கூறினார். ஆனால் அது என்னை சிறையில் தள்ளிவிட்டது. உண்மை நிச்சயம் வெளிவரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்தநிலையில் உத்தவ் தாக்கரேயை, சகன்புஜ்பால் மகன் பங்கஜ் புஜ்பால் சந்தித்து பேசியது மரியாதை நிமித்தமானது என சிவசேனா எம்.எல்.ஏ. ஒருவர் கூறினார்.
சகன் புஜ்பால் வீடு திரும்பியதை அவரது ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
Related Tags :
Next Story