அரசு பஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


அரசு பஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 11 May 2018 3:40 AM IST (Updated: 11 May 2018 3:40 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த அரசு பஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் மாவட்டம் கணியாம்பூண்டியை அடுத்த கிணத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் மயிலாத்தாள் (வயது 54). இவர் திருப்பூர் காலேஜ் ரோடு ரங்கநாதபுரத்தில் உள்ள ஒரு பனியன் நிறுவன உணவுக்கூடத்தில் வேலை செய்து வருகிறார். இதற்காக இவர் கணியாம்பூண்டியில் இருந்து திருப்பூர் பழைய பஸ் நிலையம் செல்லும் தடம் எண் 25 என்ற அரசு பஸ்சில் சென்று வருவது வழக்கம்.

சம்பவத்தன்று மயிலாத்தாள், பனியன் நிறுவனத்தில் வேலை முடிந்ததும், கணியாம்பூண்டி செல்வதற்காக ரங்கநாதபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்றுள்ளார். அப்போது அந்த வழியாக கணியாம்பூண்டி செல்லும் தடம் எண் 25 என்ற அரசு பஸ் வந்துள்ளது. அந்த பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் கோபாலகிருஷ்ணன் பஸ்சை நிறுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

கொலை மிரட்டல்

அப்போது அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் கூச்சல் போட்டதால் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அதை தொடர்ந்து மயிலாத்தாள் அந்த பஸ்சில் ஏறி சென்றார். அப்போது டிரைவர் கோபாலகிருஷ்ணன், மயிலாத்தாளை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதே போல் கடந்த 30-ந்தேதியும், அதே பஸ்சில் பயணம் செய்த மயிலாத்தாளை, அன்று பணியில் இருந்த டிரைவர் கோபாலகிருஷ்ணன், தகாத வார்த்தைகைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து கோபாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையம் மற்றும் அரசு போக்குவரத்து கழக திருப்பூர் மேலாளர் ஆகியோருக்கு மயிலாத்தாள் புகார் செய்தார். இந்த புகார் குறித்து இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

முற்றுகை

இதனால் ஆத்திரம் அடைந்த மயிலாத்தாள் மற்றும் அவருடைய உறவினர்கள் நேற்று 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது டிரைவர் கோபாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து டிரைவர் கோபாலகிருஷ்ணனை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அவருக்கு ஆதரவாக சில அரசு பஸ் டிரைவர்களும் அங்கு வந்தனர். அப்போது அந்த வழியாக திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பூண்டி வழியாக புதிய பஸ் நிலையம் சென்ற தடம் எண். 105 என்ற பஸ் வந்தது. இந்த பஸ்சின் டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டு, கோபாலகிருஷ்ணனுக்கு ஆதரவாக போலீஸ் நிலையம் வந்தார். இதனால் அந்த பஸ்சில் இருந்த பயணிகள் என்ன செய்வது என்று தெரியாமல் அவதிப்பட்டனர்.

பரபரப்பு

பின்னர் போலீஸ் நிலையத்தில் வைத்து மயிலாத்தாள் தரப்பினருக்கும், அரசு பஸ் டிரைவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.அப்போது அரசு பஸ் டிரைவர் கோபாலகிருஷ்ணன், இனி இதுபோல் நடக்காது என்று உறுதிஅளித்தார். அதன்பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். முன்னதாக இந்த முற்றுகை போராட்டம் சுமார் 4 மணிநேரம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story