‘ராகுல் காந்தியை கிண்டல் செய்வது ஜனநாயக விரோத போக்கு’ பா.ஜனதாவுக்கு சிவசேனா கண்டனம்


‘ராகுல் காந்தியை கிண்டல் செய்வது ஜனநாயக விரோத போக்கு’ பா.ஜனதாவுக்கு சிவசேனா கண்டனம்
x
தினத்தந்தி 11 May 2018 3:45 AM IST (Updated: 11 May 2018 3:41 AM IST)
t-max-icont-min-icon

ராகுல் காந்தியை கிண்டல் செய்வது ஜனநாயக விரோத போக்கு என பா.ஜனதாவுக்கு சிவசேனா கண்டனம் தெரிவித்து உள்ளது.

மும்பை, 

ராகுல் காந்தியை கிண்டல் செய்வது ஜனநாயக விரோத போக்கு என பா.ஜனதாவுக்கு சிவசேனா கண்டனம் தெரிவித்து உள்ளது.

பிரதமர் பதவி

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வருகிற 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றினால் தான் பிரதமர் பதவியை ஏற்க தயார் என கூறினார்.

ராகுல் காந்தியின் கருத்தை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்தார். காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியை விட மூத்த தலைவர்கள் பலர் இருக்கும்போது அவர் பிரதமர் பதவிக்கு பேராசைப்படுவதாக பா.ஜனதா தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் கூறியிருப்பதாவது:-

ஜனநாயக விரோதம்

ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு ஆசைப்படுவதாக கூறுவதும், அவரை கிண்டல் செய்வதும் ஜனநாயக விரோத போக்காகும். இந்த நாட்டில் ஜனநாயகம் இன்னமும் எஞ்சியிருப்பதாக கருதினால், பா.ஜனதா ராகுல் காந்தியின் கருத்தை சவாலாக ஏற்றுக்கொண்டு வருகிற 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அவரை சந்திக்க வேண்டும்.

ராகுல் காந்தி கடந்த 2014-ம் ஆண்டில் இருந்ததைபோல் தற்போது இல்லை. விமர்சனங்கள் அவரை நன்றாக மெருகேற்றி உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில் அவரது செயல்பாடே இதனை நிரூபிக்க போதுமானது.

பா.ஜனதாவினர் மரியாதை குறைவான மொழியை கையாண்டாலும் அவர் மிக கண்ணியத்துடனேயே இவற்றை எல்லாம் எதிர்கொண்டுள்ளார். அவரது இந்த அரசியல் நாகரிகத்தை எதிர் தரப்பினர் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

முதுகில் குத்திவிட்டது

காங்கிரசில் மூத்த தலைவர்கள் பலர் பிரதமர் பதவிக்கு தகுதி பெற்றவர்களாக இருக்கும்போது ராகுல் காந்தி எவ்வாறு பிரதமர் ஆகலாம் என எழுப்பப்படும் கேள்விக்கு பா.ஜனதாவின் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றோர் தான் பதிலளிக்க தகுதியானவர்கள்.

காங்கிரஸ் கட்சி தனது கூட்டணி கட்சிகளுடன் கலந்துரையாடுவது இல்லை என பா.ஜனதா நினைக்கிறது. முதலில் பா.ஜனதா இதுவரையில் எத்தனை முக்கிய முடிவுகளில் தனது கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்துள்ளது என்பதை நாங்கள்(கூட்டணி கட்சிகள்) தெரிந்து கொள்ள விரும்புகிறோம். பா.ஜனதா தனது அதிகாரத்தின் மூலம் கூட்டணி கட்சிகளின் முதுகில் குத்திவிட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Next Story