தொடர் திருட்டில் ஈடுபட்டதால் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


தொடர் திருட்டில் ஈடுபட்டதால் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 11 May 2018 3:42 AM IST (Updated: 11 May 2018 3:42 AM IST)
t-max-icont-min-icon

தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அவினாசி, 

அவினாசி ஸ்ரீராம் நகரில் சண்முகம் என்பவரின் வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன் பூட்டை உடைத்து 15 பவுன் நகையை மர்ம நபர் ஒருவர் திருடிச்சென்றார். இதுதொடர்பாக அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

விசாரணையில் சண்முகம் வீட்டில் திருடியது சென்னை குரோம்பேட்டை ஆதாம் நகரை சேர்ந்த பிரகாஷ்(வயது 24) என்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து பிரகாசை கடந்த மாதம் 3-ந்தேதி கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, சேவூர் குரும்பப்பாளையத்தை சேர்ந்த யுவராஜ் என்பவரின் வீட்டில் பூட்டை உடைத்து 4½ பவுன் நகைதிருடியது, கருவலூரில் ஒரு தொழிலாளி வீட்டில் பூட்டை உடைத்து 8 பவுன் நகை திருடியது உள்பட பல்வேறு தொடர் திருட்டு வழக்குகளில் அவர் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து பிரகாசை அவினாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

குண்டர் சட்டத்தில் கைது

மேலும் பிரகாஷ் மீது பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக சென்னை குரோம்பேட்டையில் சாலையில் நடந்து சென்ற ரமா என்ற பெண்ணின் கழுத்தில் இருந்து 3 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்றது, காஞ்சிபுரத்தில் தங்கராஜ் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 3½ பவுன் நகை திருடியது தொடர்பான வழக்குகள் உள்ளன.

இந்தநிலையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பிரகாஷ் ஜாமீனில் வெளியே வந்தால், அவர் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பார் என்று கூறி அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பரிந்துரை செய்தார். அதன்பேரில் பிரகாசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி உத்தரவிட்டார். இதைதொடர்ந்து கோவை மத்திய சிறைக்கு சென்ற அதிகாரிகள், பிரகாசை குண்டர் சட்டத்தில் கைது செய்து, அதற்கான ஆணையை சிறைஅதிகாரிகளிடம் வழங்கினார்கள். 

Next Story