மாவட்ட செய்திகள்

திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டல அலுவலகத்தில் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு + "||" + KN Vijayakumar MLA Sudden inspection

திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டல அலுவலகத்தில் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு

திருப்பூர் மாநகராட்சி
1-வது மண்டல அலுவலகத்தில் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு
திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டல அலுவலகத்தில் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வில் ஈடுபட்டார்.
அனுப்பர்பாளையம்,

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் குப்பைகள் சரியாக அகற்றப்படாததால் ஆங்காங்கே குப்பைகள் குவிந்துள்ளன. இதேபோல் ஒரு சில இடங்களில் சாக்கடை கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளதால் கழிவுநீர் நிரம்பி சாலையில் ஓடுகிறது.

இந்த நிலையில் 1-வது வார்டுக்குட்பட்ட திலகர்நகர் பகுதியில் குப்பை அதிக அளவில் தேங்கி இருப்பதாக ‘தினத்தந்தி‘ நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இந்த நிலையில் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. (திருப்பூர் வடக்கு) அனுப்பர்பாளையத்தில் உள்ள 1-வது மண்டல அலுவலகத்திற்கு நேற்று அதிகாலை 5.30 மணிக்கு திடீரென சென்றார். பின்னர் அந்த பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்ற எம்.எல்.ஏ. 1-வது மண்டலத்திற்குட்பட்ட 1, 2, 5, 6, 15 ஆகிய வார்டுகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருகின்றனரா? என்றும், பணிகளை சரியாக செய்கின்றனரா? என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

பணியாளர்களுக்கு எச்சரிக்கை

அந்த 5 வார்டுகளில் மேஸ்திரி, வாகன ஓட்டுனர்கள், சாக்கடை கால்வாய் சுத்தம் செய்பவர்கள், குப்பை அகற்றுபவர்கள் உள்பட மொத்தம் 76 பேர் பணியில் உள்ளனர். ஆனால் காலை 6 மணிக்கு வேலை வர வேண்டிய துப்புரவு பணியாளர்களில் 12 பேர் தவிர மீதமுள்ளவர்கள் அனைவரும் 6.30 மணிவரை பணிக்கு வரவில்லை. இதையடுத்து சுகாதார ஆய்வாளர் கார்த்திகேயனை அழைத்து விசாரணை நடத்திய எம்.எல்.ஏ., மேலும் பணியாளர்களின் தினசரி வருகை பட்டியலை வாங்கி சரிபார்த்தார். பின்னர் தாமதமாக வந்த பணியாளர்களை சரியான நேரத்திற்கு பணிக்கு வருமாறும், அவரவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை அந்தந்த வார்டுகளில் நேர்த்தியாக செய்ய வேண்டும் என்றும் எச்சரிக்கை செய்தார்.

மேலும் பொதுமக்களிடம் இருந்து புகார் வராத வகையில் மாநகராட்சியின் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார ஆய்வாளர் கார்த்திகேயனுக்கு எம்.எல்.ஏ. உத்தரவிட்டார். திருப்பூர் 1-வது மண்டல அலுவலகத்தில் அதிகாலை நேரத்தில் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.