தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணையில் மூழ்கி என்ஜினீயர் பலி
தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணையில் மூழ்கி என்ஜினீயர் பலியானார். அவருடைய நண்பர் மீட்கப்பட்டார்.
தேவதானப்பட்டி,
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள ஜி.தும்மலப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ். வக்கீல். அவருடைய மகன் பிரதீப் (வயது 28). என்ஜினீயர். இவர், பெங்களூருவில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். கோவில் திருவிழாவுக்காக, கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதீப் சொந்த ஊருக்கு வந்தார்.
இந்தநிலையில் பிரதீப் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் ஹரிகரன் உள்பட 8 பேருடன், தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணைக்கு நேற்று மதியம் குளிக்க சென்றார். பிரதீப் தனது நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்தார். திடீரென அவர், அணையின் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு செல்ல திட்டமிட்டார்.
என்ஜினீயர் பலி
அதன்படி பிரதீப்பும், ஹரிகரனும் அணையின் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு நீந்தி சென்றனர். மீதமுள்ள 6 பேரும் கரையில் குளித்து கொண்டிருந்தனர். அணையின் பாதி தூரம் சென்றவுடன் பிரதீப்பும், ஹரிகரனும் தண்ணீரில் மூழ்கினர். இதனைக்கண்ட அவருடைய நண்பர்கள் கூச்சல் போட்டனர்.
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு, கரையோரத்தில் வலைகளை உலர்த்தி கொண்டிருந்த மீன்பிடி தொழிலாளர்கள் ஓடி வந்தனர். பின்னர் அவர்கள், பரிசல்கள் மூலம் அணையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால், அதற்குள் தண்ணீரில் மூழ்கி பிரதீப் உயிர் இழந்து விட்டார். அவரது உடலை, தொழிலாளர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இதேபோல் தண்ணீரில் மூழ்கிய ஹரிகரனை, மீன்பிடி தொழிலாளர்கள் உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எச்சரிக்கையை மீறி...
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், தேவதானப்பட்டி அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்த பிரவீன் என்ற தனியார் நிறுவன ஊழியர் அணையில் மூழ்கி பலியானார்.
அதன்பிறகு அணையின் பல்வேறு பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி அணையில் குளிப்பதால் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story