கொட்டி தீர்த்த கோடைமழை: கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு


கொட்டி தீர்த்த கோடைமழை: கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 10 May 2018 10:23 PM GMT (Updated: 10 May 2018 10:23 PM GMT)

கொட்டி தீர்த்த கோடைமழை எதிரொலியாக கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

போடி,

போடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. குறிப்பாக போடி, அணைக்கரைப்பட்டி, சோலையூர், கொட்டக்குடி, குரங்கணி, வடக்கு மலை பகுதியில் பலத்த மழை கொட்டியது. அதன்படி நேற்று முன்தினம் இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. தொடர்மழை எதிரொலியாக, கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திர காலத்தில், 37 ஆண்டுகளுக்கு பிறகு கொட்டக்குடி ஆற்றில் தற்போது தான் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தற்போது அந்த ஆற்றில் பிள்ளையார் தடுப்பு அணை பகுதியில் நீர்வீழ்ச்சி போல தண்ணீர் கொட்டுகிறது.

விவசாயிகள் மகிழ்ச்சி

காண்போரை கொள்ளை கொள்ளும் வகையில் தண்ணீர் விழுகிறது. இதனை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து பார்த்து ரசித்து செல்கிறார்கள். இதேபோல் தருமத்துப்பட்டி, கரட்டுப்பட்டி, சிலமலை ஆகிய பகுதிகளில் பெய்த மழையினால் ஆங்காங்கே புதிதாக நீரோடைகள் உருவாகி உள்ளன. மேலும் போடி மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. சுட்டெரிக்கும் வெயிலை விரட்டியடிக்கும் வகையில் பெய்து வரும் கோடை மழையினால் போடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Next Story