வீடு இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் மாநாட்டில் தீர்மானம்
வீடு இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குளித்தலை,
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் கரூர் மாவட்ட 5-வது மாநாடு குளித்தலையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. குளித்தலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு இச்சங்கத்தின் மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.
மாநாட்டில் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்கவேண்டும். தமிழகத்தில் போதிய மழையின்றி வறட்சி ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு விவசாய தொழிலாளர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் செய்யும் வேலையை 200 நாளாக உயர்த்தி ரூ.400 சம்பளமாக வழங்கவேண்டும். கரூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளுக்கும் இத்திட்டத்தின் கீழ் வேலை வழங்கவேண்டும்.
வீட்டுமனை பட்டா
வறட்சி நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.5 ஆயிரம் மற்றும் 30 கிலோ அரிசி வழங்கவேண்டும். வீடு இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றி ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்கவேண்டும். கோவில் நிலத்தில் குடியிருக்கும் அனைவருக்கும் குடிமனை பட்டா வழங்க வேண்டும். சட்ட கூலி ரூ.205-யை முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டில் இச்சங்கத்தின் மாநில பொது செயலாளர் அமிர்தலிங்கம், செயலாளர் பழனிசாமி, மாவட்ட செயலாளர் முத்துசெல்வன், பொருளாளர் பழனியாண்டி, துணை தலைவர் கணேசன், வரவேற்புக்குழு தலைவர் சங்கரநாராயணன், செயலாளர் வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story