புதுக்கோட்டை அருகே அதிகாரிகள் அதிரடி சீனாவுக்கு கடத்த முயன்ற 1,487 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் 3 வாலிபர்கள் கைது


புதுக்கோட்டை அருகே அதிகாரிகள் அதிரடி சீனாவுக்கு கடத்த முயன்ற 1,487 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் 3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 10 May 2018 10:38 PM GMT (Updated: 10 May 2018 10:38 PM GMT)

புதுக்கோட்டை அருகே இலங்கை வழியாக சீனாவுக்கு கடத்த முயன்ற 1,487 நட்சத்திர ஆமைகளை மத்திய வருவாய் புலனாய்வு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அன்னவாசல்,

பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட நட்சத்திர ஆமைகளை இந்தியாவில் இருந்து சிலர் வெளிநாடுகளுக்கு ரகசியமாக கடத்தி வருகிறார்கள். இந்நிலையில் பெங்களூரு மத்திய வருவாய் புலனாய்வு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு புதுக்கோட்டை அருகே உள்ள ரெங்கம்மாள் சத்திரம் பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக நட்சத்திர ஆமைகளை ஒரு கும்பல் சேகரித்து வருவதாக தகவல் கிடைத்தது.

இதைத்தொடந்து மத்திய வருவாய் புலனாய்வு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் புதுக்கோட்டை அருகே உள்ள ரெங்கம்மாள் சத்திரம் பகுதியில் உள்ள ஒரு பிஸ்கட் குடோனை ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது அந்த குடோனில் இருந்து நட்சத்திர ஆமைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த குடோனின் உரிமையாளர் காவிரிநகர் பகுதியை சேர்ந்த கண்ணுத்துரையை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆந்திராவில் இருந்து ரெங்கம்மாள் சத்திரத்தில் உள்ள கண்ணுத்துரைக்கு சொந்தமான குடோனுக்கு ஒரு காரில் சிலர் வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த பெங்களூரு, திருச்சி, மதுரை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மத்திய வருவாய் புலனாய்வு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 40 பேர் நேற்று காலை கண்ணுத்துரைக்கு சொந்தமான குடோனுக்குள் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த குடோனில் டிராவல் பைகள் மற்றும் காய்கறி கூடை போன்றவற்றில் ஏராளமான நட்சத்திர ஆமைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் குடோனில் இருந்த 1,487 நட்சத்திர ஆமைகளை பறிமுதல் செய்தனர். மேலும், குடோனுக்கு காரில் வந்த பெங்களூருவை சேர்ந்த வாலிபர்கள் புரோகான் (வயது 29), அமீர் (34), சையது (30) ஆகிய 3 பேரையும் கைது செய்து, குடோனில் வைத்து தனித் தனியாக விசாரணை நடத்தினார்கள். அவர்கள் வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

ரூ.3 கோடி மதிப்புடையவை

அப்போது அவர்கள் கூறுகையில், இந்த நட்சத்திர ஆமைகளை இலங்கை வழியாக சீனாவுக்கு கடத்திச்செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும், இதனை கண்ணுத்துரை சேகரித்து தந்தார் எனவும் கூறினார்கள். பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகளின் இந்திய மதிப்பு ரூ.3 கோடி இருக்கும் எனவும், சர்வதேச அளவில் அவற்றின் மதிப்பு ரூ.15 கோடி இருக்கும் எனவும் மத்திய வருவாய் புலனாய்வு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து, புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை அதிகாரி ஆனந்தகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர், சம்பவ இடத்துக்கு வந்து மத்திய வருவாய் புலனாய்வு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை நடத்தினார். அதனைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகளை அதிகாரிகள், புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை அதிகாரி ஆனந்தகுமாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் குடோன் உரிமையாளர் கண்ணுத்துரை உள்பட சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.

கலெக்டர் பார்வையிட்டார்

பறிமுதல் செய்யப்பட்ட 1,487 நட்சத்திர ஆமைகளை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் நேரில் பார்வையிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகளை உரிய அனுமதி பெற்று நீர்நிலைகளில் விடு வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சட்டத்திற்கு புறம்பாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். 

Next Story