நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடப்பட்டது பட்டாசு வெடித்து பொதுமக்கள் கொண்டாட்டம்


நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடப்பட்டது பட்டாசு வெடித்து பொதுமக்கள் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 11 May 2018 4:10 AM IST (Updated: 11 May 2018 4:10 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

கீரமங்கலம்,

இந்த திட்டத்திற்காக நல்லாண்டார்கொல்லை, வடகாடு, கருக்காகுறிச்சி, வானக்கன்காடு, கோட்டைக்காடு ஆகிய 5 இடங்களில் இயற்கை எரிவாயு எடுக்க ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டன. மேலும் நெடுவாசலிலும் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது. இந்த இடங்களில் அதிகாரிகள் ஆய்வு பணிகளையும் நடத்தி வந்தார்கள்.

இந்த திட்டத்தை செயல்படுத்தினால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். வரும் காலங்களில் குடிநீர் என்பதே கேள்விக்குறியாகி விடும் என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடத்தினர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர், நடிகைகள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து பேசினர். இந்த நிலையில் மத்திய, மாநில அமைச்சர்கள் இந்த திட்டம் கொண்டு வரப்பட மாட்டாது என்று போராட்ட பந்தலுக்கே வந்து உறுதி அளித்தனர். அதனை ஏற்று 22 நாட்கள் நடைபெற்ற முதல்கட்ட போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

62 பேருக்கு சம்மன்

இந்நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, எரிவாயு எடுக்க மத்திய அரசு, ஜெம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு கையெழுத்து போட்டது. இதனை அறிந்த பொதுமக்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் 12-ந் தேதி 2-ம் கட்டமாக போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் 174 நாட்கள் வரை நீடித்தது. போராட்டம் நடத்தியவர்களில் 62 பேர் மீது கீரமங்கலம், வடகாடு, ஆலங்குடி போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

போராட்டக்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்ய மாட்டோம் என்று மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்திருந்த நிலையில், நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளதால் போராட்டக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். அதனால், சம்மன் கொடுக்கப்பட்டுள்ள கிராமங்களுக்கு சென்ற நெடுவாசல் போராட்டக்குழுவினர் நாளை (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு வடகாடு கிராமத்தில் அனைத்து கிராம மக்களுடன் ஆலோசனை செய்து பெரிய அளவில் போராட்டம் நடத்துவது குறித்து அறிவிப்பதாக தெரிவித்தனர்.

ஜெம் நிறுவனம் விலகல்

இந்நிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி ஒரு வருடம் கடந்து விட்டதாலும், பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாகவும் நெடுவாசல் கிராமத்திற்குள் சென்று ஜெம் நிறுவனம் எந்த பணிகளும் செய்ய முடியாமல் தவித்தது. இதுகுறித்து ஜெம் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஹரிபிரசாத் டெல்லியில் கூறும்போது, நெடுவாசல் திட்டம் செயல்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட நிலங்களை எங்கள் நிறுவன பெயருக்கு மாற்றி தரக்கோரி தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் பலமுறை கடிதம் அனுப்பியும் பதில் இல்லை.

ஜெம் நிறுவனம் என்பது லாப நோக்கம் கொண்ட வியாபார நிறுவனம் தான். ஆனால், ஒரு வருடத்துக்கு மேலாக சம்பந்தப்பட்ட நிலத்தை மாற்றி கொடுக்காததால் பணியை தொடங்க முடியாமல் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே, நெடுவாசல் திட்டத்தை கைவிடுவதாக வும், அதற்கு பதிலாக மாற்று இடம் வேண்டும் என்றும் மத்திய பெட்ரோலிய துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளோம் என்று கூறியுள்ளார்.

பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் நெடுவாசல் நாடியம்மன் கோவில் திடலில் நேற்று கூடிய நெடுவாசல் மற்றும் சுற்று வட்டார கிராம விவசாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

அப்போது பொதுமக்கள் சார்பாக சிலர் கூறுகையில், நெடுவாசல் திட்டத்துக்கு எதிராக போராடிய விவசாயிகள், அரசியல் கட்சிகள், இளைஞர்கள், சமூக நல அமைப்புகள், மாணவர்கள், திரைத்துறையினருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இந்த திட்டத்தை ஒப்பந்தம் செய்த நிறுவனமே வேண்டாம் என்று சொல்லிவிட்டதால் மத்திய அரசும் முழுமையாக இந்த திட்டத்தை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும். அதற்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட விவசாயம் சார்ந்த எந்த ஊரிலும் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த கூடாது என்றனர்.

Next Story