போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா


போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா
x
தினத்தந்தி 11 May 2018 10:26 AM IST (Updated: 11 May 2018 10:26 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து அரசு பஸ்களிலும் இலவச பயண அட்டையை அனுமதிக்கக்கோரி போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

விழுப்புரம்,

வானூர் தாலுகா நல்லாவூரை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் மகன் ராமச்சந்திரன் (வயது 28), மாற்றுத்திறனாளியான இவர் நேற்று சொந்த வேலை காரணமாக விழுப்புரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு வந்தார்.

பின்னர் மீண்டும் நல்லாவூருக்கு செல்ல விழுப்புரத்தில் இருந்து திண்டிவனத்திற்கு அரசு பஸ்சில் பயணம் செய்தார். இவர், பஸ் கண்டக்டரிடம் தன்னுடைய இலவச பயண அட்டையை காண்பித்தார். அதை ஏற்க மறுத்த கண்டக்டர், அந்த மாற்றுத்திறனாளியை ஒருமையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த ராமச்சந்திரன், பஸ் கண்டக்டரிடம் பணம் கொடுத்து பயணச்சீட்டு எடுத்து பயணம் செய்தார். இதேபோல் பல அரசு பஸ்களில் மாற்றுத்திறனாளிகளின் இலவச பயண அட்டையை கண்டக்டர்கள் ஏற்பதில்லை என்று புகார் எழுந்தது.

இந்த நிலையில் நேற்று பகல் 12 மணிக்கு மாற்றுத்திறனாளிகள், விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். திடீரென இவர்கள் அனைவரும் அங்குள்ள வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க மாவட்ட பொதுச்செயலாளர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் ஜெகன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து அரசு பஸ்களிலும் இலவச பயண அட்டையை அனுமதிக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக இருக்கை ஒதுக்கீடு செய்ய வேண்டும், தொலைதூரம் செல்லும் அரசு விரைவு பஸ்களில் 4-ல் 1 பங்கு கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் மதியம் 2.30 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story