குடிநீர் தேவைக்காக 311 புதிய பணிகளுக்கு நிர்வாக அனுமதி


குடிநீர் தேவைக்காக 311 புதிய பணிகளுக்கு நிர்வாக அனுமதி
x
தினத்தந்தி 11 May 2018 6:16 AM GMT (Updated: 11 May 2018 6:16 AM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் தேவைக்காக 311 புதிய பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

போகலூர்,

பரமக்குடி தாலுகா பாண்டிகண்மாய் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. முகாமில் 56 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.26 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கி பேசியதாவது:- பாண்டிக்கண்மாய் ஊராட்சி பகுதிகளில் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்காக ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் நான்கு புதிய வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுஉள்ளது. இப்பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

தற்போதைய சூழ்நிலையில் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்வதை உறுதி செய்யும் வகையில் அலுவலர்களுக்கு உத்தரவு இடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் நடப்பாண்டில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக இதுவரை ரூ.7கோடியே 46 லட்சம் மதிப்பில் 311 புதிய பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர பொதுமக்கள் குடிநீர் வேண்டி கோரிக்கை வைக்கும் பட்சத்தில் அதனை உடனுக்குடன் ஆய்வு செய்து தேவைக்கு ஏற்றவாறு புதிய குடிநீர் ஆதாரங்கள் ஏற்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் ரூ.70 லட்சம் மதிப்பில் 98 ஊருணிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நீர்வள, நிலவள திட்டத்தின்கீழ் நடப்பாண்டில் பொதுப்பணித்துறையின் மூலம் ரூ.20 கோடியே 15 லட்சம் மதிப்பில் 53 கண்மாய்களிலும், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத்தொடர்ந்து பாண்டிக்கண்மாய் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்திற்கு நேரடியாக சென்று அங்குள்ள கழிப்பறையின் பயன்பாடு மற்றும் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்தார்.

முகாமில் கால்நடைப் பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் மோகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜா, மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் மாரியம்மாள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, வழங்கல் அலுவலர் மதியழகன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முருகானந்தம், தாட்கோ மேலாளர் செல்வராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல், பரமக்குடி தாசில்தார் பரமசிவம் உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Next Story