கருத்தைக் கவரும் கணியான் கூத்து


கருத்தைக் கவரும் கணியான் கூத்து
x
தினத்தந்தி 11 May 2018 7:43 AM GMT (Updated: 11 May 2018 7:43 AM GMT)

தமிழகத்தின் தென்மாவட்டப் பகுதிகளில் வாழும் ‘கணியான்’ இனத்து மக்கள் சடங்கு நிலையில் நிகழ்த்தும் ஒரு வகை கூத்துக் கலையே ‘கணியான் கூத்து’ ஆகும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய தென்மாவட்டப் பகுதிகளில் பரவலாக வழக்கிலுள்ள சிறு தெய்வ வழிபாடுகளான சுடலைமாடன், இசக்கியம்மன் வழிபாட்டுச் சடங்குகளில் இக்கணியான் கூத்து ‘கண்டிப்பாக நிகழ்த்திட வேண்டும்’ எனும் நிலையில் அதிகமாக நிகழ்த்தப்பட்டு வருகிறது.

கணியான் கூத்து இல்லாத சுடலைமாடன், இசக்கியம்மன் கொடை விழாக்கள் இருப்பதில்லை. பொதுவாக இக்கொடை விழாக்கள் ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களிலேயே அதிலும் குறிப்பாக வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளிலேயே நடைபெறும். கணியான் கூத்தினை ஆடவர்கள் மட்டுமே நிகழ்த்துவர். ஆடவர் இருவர் பெண் வேடமிட்டு, அண்ணாவியாரின் (குழுத்தலைவர்) தெய்வக் கதைப் பாடல் மற்றும் மகுடம், தாளம் இசைக்கேற்ப குதித்து ஆடுவர். சங்ககாலம் முதற்கொண்டே இக்கணியான் கூத்து நடைபெற்று வருகிறது. சுடலை மாடன் என்னும் சிறு தெய்வத்துடன் அத்தெய்வத்திற்கு உதவிட சிவபெருமானால் உருவாக்கப்பட்ட கணியான் ரம்பை, ஊர்வசி என்னும் தேவலோக ஆடல் மகளிரின் கால் சிலம்பு பரல்களிலிருந்து படைக்கப்பட்டான். முதலில் இருவர் மட்டுமே படைக்கப்பட்டதாக புராணம் குறிப்பிடுகிறது. அவர்களே மிகக் குறைவான அளவில் பெருகி மிகச் சிறந்த கலையினை நிகழ்த்தி வருகின்றனர்.

நாட்டுப்புற மக்கள், தங்கள் பிணி தீரவும், வாட்டம் நீங்கவும், தொழில் சிறக்கவும், துன்பம் தொலையவும், திருமணம், குழந்தைப்பேறு முதலிய மங்கல நிகழ்வுகள் ஏற்படவும் வழிபடும் தெய்வங்களிடம் வரம் வாங்கித் தரும் வல்லமை கொண்டதாகக் கணியான் ஆட்டத்தை நம்புகின்றனர்.

பண்டைக்காலத்தில் முனிவர்கள் பூவுலகக் காவலுக்கு ஒரு தெய்வம் வேண்டும் என சிவபெருமானிடம் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்றுக்கொண்ட சிவபெருமான், “வேள்வி ஒன்றை நடத்தினால் வேள்விக் குண்டத்திலிருந்து ஒரு தெய்வம் வெளிவரும். அத்தெய்வமே நீங்கள் வேண்டும் காவல் தெய்வம் ஆகும்” என கூறி அருள்புரிந்தார். அதன்படி முனிவர்கள் வேள்வி நடத்தினர். ஆனால் அதனுள் உருவான தெய்வம் வெளியே வர மறுத்தது. முனிவர்கள் மீண்டும் இறைவனிடம் வேண்ட இறைவனோ அத்தெய்வத்திடம் உரிய காரணம் கேட்டார். அதற்கு அத்தெய்வம், “நான் வெளியே வர வேண்டுமானால் எனக்கு ஆடு, கோழி, பன்றி பலி கொடுத்து பெரிய படையல் போட்டு வழிபடவேண்டும். நான் செல்லுமிடமெல்லாம் என்னுடன் பயணித்து உதவி செய்ய இரண்டு கணியான்கள் வேண்டும். அவர்கள் என் கதையைப்பாடி ஆடி என்னை மகிழ்வித்து எனது தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் நான் காவல் தெய்வமாக இருந்து மக்களைக் காத்தருள்வேன்” என கூறியது.

சிவபெருமானோ ரம்பை, ஊர்வசியை அழைத்து வேள்விக் குண்டத்தின் முன் நடனமாட பணித்தார். அவர்கள் ஆடியபொழுது காற் சிலம்புகளின் பரல்கள் ஒன்றோடு ஒன்று உரசி சிவபெருமான் காலடியில் விழுந்தன. அவற்றில் இருந்து இரு கணியான்கள் பிறந்தனர். அவர்கள் இருவருக்கும் கணியான் ஆட்டத்தின் இலக்கண முறைகளைப் போதித்தார் இறைவன். அத்துடன் தன் தலையில் உள்ள மகுடத்தை (மணிமுடி) எடுத்து இரு தோல் இசை மகுட வாத்தியங்களாக மாற்றி ஆளுக்கொன்றாகக் கொடுத்து சுடலைமாடனுடன் பூலோகத்திற்கு அனுப்பி வைத்தார் என்பது கணியான் கூத்து தொடர்பான புராணக் கதையாகும். இறைவன் படைத்தளித்த மகுடத்தை இசைத்துக் கொண்டே ஆடும் ஆட்டம் என்பதால் இது ‘மகுட ஆட்டம்’ எனவும் வழங்கப்படுகிறது.

தொடக்கத்தில் இரண்டு கணியான்களே பெண் வேடமிட்டு மகுடம் இசைத்து தெய்வக்கதை பாடலைப் பாடி ஆடினர். நாளடைவில் பாடுவதற்கு ஒருவர், பின்பாட்டு (பக்கபாட்டு) பாட ஒருவர், மகுடம் இசைக்க இருவர், பெண் வேடமிட்டு ஆட இருவர், சிங்கித் தாளம் இசைக்க ஒருவர் என மொத்தம் ஏழு பேர் கொண்ட குழுவாக மாறினர்.

கணியான் கூத்தின் பாடுபொருளான தெய்வக் கதைப் பாடல்களைப் பாடுபவர் அண்ணாவி எனப்படுகிறார். அண்ணாவியே குழுத்தலைவர் ஆவார். அவரை வணங்கியே கலைஞர்கள் கலையை நிகழ்த்துவர். அண்ணாவியின் பாடலுக்கும் பின்பாட்டுக் கலைஞர்களின் உச்சப் பாடலுக்கும் ஏற்ப இருவர் மகுடம் இசைப்பர். இருவர் மகுடத்திலும் ஒரே இசை வருவதில்லை. ஒரு மகுடத்தின் இசை உச்சமாகவும் மற்றொரு மகுடத்தின் இசை மந்தமாகவும் இருக்கும். அண்ணாவி பாடலை உச்சத்தில் பாடும்பொழுது மகுடக்காரர்கள் வேகமாகவும், மெதுவாக விளக்கிப் பாடும்பொழுது மெதுவாகவும் இசைப்பர்.

மகுட இசை பாடல் தாளத்திற்கு ஏற்றவாறு பெண் வேடக் கலைஞர்கள் வேகமாகவும், மெதுவாகவும் நளினமாகவும் அலுக்கியும் குலுக்கியும் துள்ளிக் குதித்து ஆடுவர். கணியான் கூத்தின் பாடுபொருளாக சுடலைமாடன் கதை, இசக்கியம்மன் கதை, நீலி கதை, முண்டன் கதை, பத்திரகாளியம்மன் கதை, சாஸ்தா கதை, வண்ணாரமாடன் கதை, பலவேசக்காரன் கதை, மாரியம்மன் கதை, கருப்பசாமி கதை, பேச்சியம்மன் கதை, கபாலக்காரன் கதை, பகவதியம்மன் கதை, உடையார்சாமி கதை, உய்க்காட்டான் கதை, பெருமாள் சுவாமி கதை, சிவபெருமான் கதை, பார்வதி அம்மன் கதை, ராமாயாணக் கதை, மகாபாரதக் கதை, கோவலன் கண்ணகி கதை, மணிமேகலை கதை முதலிய பல்வேறு கதைப்பாடல்கள் இடம்பெறுகின்றன. ஸ்ரீவைகுண்டம் முத்துராமலிங்கம் அண்ணாவியார் தனக்கு 36 கிராம தெய்வங்களின் கதைகள் மனப்பாடமாகத் தெரியும் என்கிறார்.

மாயாண்டி சுடலை அய்யா

சத்திராதி முண்டசாமிதாயான பேச்சியோட்டு

கச்சை வருஞ்சி பூட்டி

கருத்த கச்சை சுண்டலிட்டு

ஒட்டு கச்சை சல்லடம்... என்னும் பாடல் அடிகளை கணியான் கூத்துப் பாடலுக்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.

அம்மன் கோவில்களில் செவ்வாய்க்கிழமையும் சுடலைமாடன் கோவில்களில் வெள்ளிக்கிழமையும் கொடை விழா நடப்பது வழக்கம். அதற்கு முதல் நாள் குடியழைப்பில் தொடங்கி மதியக்கொடை, சாமக்கொடை, கைவெட்டு, மயான பூஜை, மஞ்சள் நீராட்டு என மூன்று நாட்கள் கணியான் கூத்து நிகழ்த்தப்படுகிறது. கால்நாட்டும் நாளிலிருந்து கொடைவிழா முடியும்வரை எட்டு நாட்கள் கணியான் கலைஞர்கள் காலை மாலை இரு வேளையும் நீராடி பழம், பச்சரிசி சாதம் மட்டும் உண்டு விரதம் இருப்பர். தெய்வத் திருவுருவம் அலங்கரிப்பதில் இவர்களின் பங்களிப்பு அதிகம் உண்டு. கொடை விழாவிற்கு முதல் நாள் மாலை, சாமி எழுந்தருளி ஆடுபவரை சுடலை முன்பு அமர வைத்து மஞ்சள், வெற்றிலை சேர்த்து கையில் காப்பு கட்டி சுடலையின் பாடலைப் பாடி சாமியாடி மீது சுடலையை இறக்கி விடுவர். மறுநாள் நள்ளிரவு 12 மணி அளவில் பூஜை முடிந்ததும் இடுகாட்டில் சாமக்கொடை, படையல், பூசை எனத் தொடரும் சடங்குகளிலும் கணியான் முக்கியத்துவம் பெறுவார். இந்தப் பூஜையின் பொழுது சாமியாடிகள் தெய்வங்களுக்குச் சமர்ப்பிக்கப்படும் சட்டிச்சோறு அதாவது திரளை சோற்றினை சமைத்துக் கொடுப்பது கணியான்களே. சுடுகாட்டிற்கு சென்ற சுடலைமாடன் பிணம் தின்று திரும்பிய பின் மயக்கமிடுவதுண்டு. அந்நிலையில் கணியான் தன் நாவினையோ, கையினையோ கீறி ரத்தத்தை சாமியாடியின் வாயில் இடுவதும் வாழைப்பழத்தில் தோய்த்து உண்ணத் தருவதுமான வினோதத்தை நிகழ்த்துவார். அதன் பின்பே சாமியாடி மயக்கம் தெளிந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு தருவார். எனவே கணியான் ஆட்டக் கலைஞராக மட்டுமல்லாது தெய்வீக ஆற்றல் வாய்ந்தவராகவும் திகழ்கிறார். அதனால் இக்கணியான் கூத்து மிகுந்த பக்தியுடன் தொடர்புடைய கலையாக இன்றும் திகழ்கிறது. கிராமத்து தெய்வங்களின் அருள் இருந்தால் மட்டுமே இக்கலையினை கற்க முடியும் என்பது நம்பிக்கை.

- முனைவர் கு.கதிரேசன், தமிழ்த்துறை தலைவர், ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர்.

Next Story