மருத்துவ நண்பன் எலிகள்!


மருத்துவ நண்பன் எலிகள்!
x
தினத்தந்தி 11 May 2018 3:34 PM IST (Updated: 11 May 2018 3:34 PM IST)
t-max-icont-min-icon

எலிகள் சுறுசுறுப்பான உயிரினங்களில் ஒன்று. உணவு, தானியங்களை கொறித்து உண்ணும் எலிகள், ஏராளமான அளவு உணவுப்பொருள் சேதத்தையும் விளைவிக்கின்றன. அதே நேரத்தில் மருத்துவ ஆய்வுகளுக்கு எலிகளே அதிக அளவில் உதவுகின்றன.

எலிகளைப் பற்றிய சுவாரசிய தகவல்களை இந்த வாரம் பார்ப்போம்....

* எலிகளில் 56 இனங்கள் உள்ளன. சில எலி இனங்களை செல்லப்பிராணிகளாக வளர்க்க முடியும்.

* எலிகள் தங்கள் குழுவினரின் மீது அதிக அக்கறை காட்டக் கூடியவை. குழுவில் யாருக்காவது காயம் ஏற்பட்டாலோ, நோய்வாய்ப்பட்டாலோ, மற்ற எலிகள் கனிவுடன் கவனித்துக் கொள்ளும்.

* நட்பு எலிகள் கிடைக்காதபோது எலிகள் தனியே சோகத்துடனும், மனஅழுத்தத்துடனும் காணப்படும்.

* எலிகளின் நினைவுத்திறன் அபாரம். ஒருமுறை அறிந்த பாதையை எப்போதும் எலிகள் மறப்பதில்லை.

* எலிகள் சந்தோஷமாக இருந்தால் எதையாவது கடித்துக் கொண்டே இருக்கும். அப்போது கண்களும் துடித்துக் கொண்டே இருக்கும்.

* எலிகளால் சிரிக்க முடியும். விளையாடும்போது லேசான ஒலியுடன் அவை சிரிப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

* எலிகளும் குழுவாக செயல்படும் திறன் கொண்டது. தன் ஜோடிக்கு அல்லது குழுவில் யாருக்கும் பிடிக்காத ஒன்றை அவை எப்போதும் செய்வதில்லை. ஒரு உணவை சாப்பிடுவதானாலும், தவிர்ப்பதானாலும் எல்லா எலிகளும் குழுவாக சேர்ந்தே செயல்படும் அல்லது புறக்கணிக்கும்.

* எலிகள் கூச்சசுபாவம் கொண்டவை, ஆனால் துறுதுறுவென்று துடிப்புடன் இருக்கும். ஒழுங்குமுறையுடன் செயல்படுவதை விரும்பும். தன்நலம் மற்றும் குழு நலம் பேணுவதற்காக எலிகள் பலமணி நேரங்களை செலவிடும்.

* நாய் மற்றும் பூனைகளைப்போல எலிகள் அதிக அளவில் வைரஸ்களை பரப்புவதில்லை. ஆனாலும் எலிகளால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. 35 நோய்கள் எலிகளால் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

* எலிகளால் ஒட்டகத்தைவிடவும் நீண்ட காலம் தண்ணீர் இன்றி தாக்குப்பிடித்து உயிர் வாழ முடியும்.

* எலியின் வால், அவை உடலை சமநிலை செய்து இயங்குவதற்கும், உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கும் உதவுகிறது.

* 12 உயிரினங்கள் கொண்ட சீன ராசிக்கட்டத்தில் எலிகள் முதலிடத்தில் வைக்கப்பட்டுள்ளன. எலியின் ராசிக்கட்டத்தில் பிறப்பவர்கள் எலிகளைப்போலவே கலைத் திறன், அறிவுத்திறன், நேர்மை, லட்சிய உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள், பெருந்தன்மை மிக்கவர்களாக இருப்பார்கள் என்கிறது சீன ஜோதிடம்.

* இந்தியாவில் விநாயக கடவுளின் வாகனமாக எலிகள் போற்றப்படுகின்றன.

* கார்னி தேவி கோவிலில் எலிகள் புனிதமானவையாக கருதப்பட்டு அவற்றுக்கு பால் மற்றும் தானியங்கள் கொடுத்து பராமரிக்கிறார்கள். இங்கு சுமார் 15 ஆயிரம் எலிகள் உள்ளன.

* எலிகள் வேகமாக இனப் பெருக்கம் செய்யும். 3 வாரத்திற்கு ஒருமுறை பெண் எலிகள் இனப்பெருக்கம் செய்யும் ஆற்றல் கொண்டிருக்கின்றன. அவை ஒவ்வொருமுறையும் 6 முதல் 10 குட்டிகள் ஈனும். குட்டிகளும் 4 மாதத்தில் வளர்ச்சி அடைந்து இனப்பெருக்கத்திற்கு தயாராகிவிடும்.

* சுமத்ரா மூங்கில் எலிகள், மிகப்பெரிய எலி இனமாகும். இவை 20 அங்குல நீளமும், 8.8 பவுண்டு எடையும் வளரக்கூடியது. அதாவது பெரிய பூனையின் அளவு இருக்கின்றன இந்த எலிகள்.

* எலிகளின் பற்கள் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும். ஆண்டுக்கு 5 அங்குலம் அளவுக்கு இதன் பற்கள் வளர்கின்றன. பற்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதற்காகவே அவை எப்போதும் எதையாவது கடித்துக் குதறிக் கொண்டிருக்கும். சில எலிகள் உலோகங்களைக்கூட கடித்து பற்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றன.

* எலிகள் சாப்பிடுவதைப்போலவே, ஏராளமான தானியங்கள், உணவுப் பொருட்களை கடித்து வீணாக்கவும் செய்கின்றன. இந்திய உணவு தானியக் கிடங்கில் சேமிக்கப்படும் உணவில் சுமார் 10 சதவீத உணவுப் பொருட்களை எலிகள் கடித்து வீணாக்குகின்றன. 20 மில்லியன் டன் அரிசி, கோதுமை மற்றும் தானியங்கள் இப்படி ஆண்டுதோறும் வீணாகின்றன. இது கனடாவின் ஓராண்டு மொத்த கோதுமை உற்பத்திக்கு நிகரானது என்பது குறிப்பிடத்தக்கது.

* எலிகளால் நன்கு நீந்த முடியும்.

* ராட்சத ஆப்பிரிக்க எலிகள் மோப்பசக்தியின் மூலம் கண்ணிவெடிகளை கண்டுபிடிக்ககூடியது. பல்வேறு இடங்களில் கண்ணிவெடி சோதனையில் எலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதேபோல மனிதன் உடலில் காசநோய் இருப்பதையும் எலிகள் மோப்பசக்தி மூலம் கண்டுபிடித்துவிடும் என்றும் சமீபத்தில் நடந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

* மிக்கி மவுஸ், டாம் அண்ட் ஜெர்ரி போன்ற ஏராளமான கற்பனைக் கதைகளும், கார்ட்டூன் கதாபாத்திரங்களும் எலிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.

* சில இடங்களில் எலி பிடிக்கும் வினோத போட்டிகள் நடத்தப்படுகின்றன. 

Related Tags :
Next Story