விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம், 7 பேருக்கு மறுவாழ்வு


விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம், 7 பேருக்கு மறுவாழ்வு
x
தினத்தந்தி 11 May 2018 10:30 PM GMT (Updated: 11 May 2018 7:00 PM GMT)

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதன் மூலம் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது.

கோவை,

கோவை பீளமேடு பி.ஆர்.புரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 22). இவர் தனது தாய் லதா, அக்காள் தீபா ஆகியோருடன் வசித்து வந்தார். மணிகண்டன், கடந்த 6-ந் தேதி அதிகாலை 3 மணி அளவில் பல்லடம் அருகே காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடனே அவரை சூலூர் கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அவினாசி ரோடு கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவரது தாய் லதா, அக்காள் தீபா ஆகியோர் மணிகண்டனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். இதையடுத்து அவரது இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், மற்றும் கண்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டது.

இதில், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், இதயம் மற்றும் நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கும், கண்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கும் வழங்கப்பட்டது. இந்த உடல் உறுப்புகள் தானம் மூலம் 7 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

இது குறித்து கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி கூறும்போது, மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரை காப்பாற்ற உதவும் என்றார். 

Next Story